சிந்தனை, அறிவின் தீப்பொறி கைகள் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அறிவாற்றல் மிக்க கைகள் மிகவும் உணர்ச்சிகரமானது முக்கியமானது, சிந்தனை மற்றும் அறிவின் தீப்பொறி போன்றது என்றும், சில வழிகளில், அவற்றின் மிகவும் முதிர்ச்சியான முடிவு கைகளே என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 25 சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் உரோம் திருப்பீடப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் பேராசிரியர்கள், பொறுப்பாளர்கள் மாணவர்கள் என ஏறக்குறைய 3000 பேரைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கைகள் "ஆன்மாவைப் போன்றது" என்று கூறிய அரிஸ்டாட்டில் அவர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைகளின் உணர்திறன் காரணமாக, வேறுபடுத்துவதற்கும் ஆராய்வதற்கும் அவற்றிற்கு ஆற்றல் உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
"மனிதனின் வெளிப்புற மூளை" என்று இம்மானுவேல் காண்ட் அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித ஆன்மாவில் அதிர்வுறும் நுண்ணறிவுகளில் முதன்மையானதாக நல்லிணக்கம் இருக்கவேண்டும் என்றும், அவை மனம், இதயம், கைகள் என்பவற்றின் தன்மை, தேவை, அடையாளம் போன்றவற்றால் வளர்க்கப்படவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்
இத்தாலிய மொழியில் உள்ள எடுத்தல் என்னும் வினைச்சொல் புரிந்துகொள், கற்றுக்கொள், ஆச்சர்யம் கொள் என்பவற்றின் வேர்ச்சொல்லில் இருந்து உருவானது என்றும், கைகளால் ஒரு பொருளை எடுக்கும் போது மனதால் புரிந்துகொள்கிறோம், என்ன என்பதை கற்றுக் கொள்கிறோம், பொருளின் தன்மையை தொடுதலின்போது உணர்ந்து ஆச்சரியம் கொள்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
புரிதல், கற்றல், ஆச்சர்யம் இவை நிகழ உணர்திறன் மிக்க கைகள் தேவை என்றும், மூடிய, பழுதான கைகளால் அவற்றை உணர முடியாது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கைகள் நேரம், ஆரோக்கியம், திறமை போன்றவற்றை வீணடித்து அமைதியையும் அழிக்கின்றன என்றும் கூறினார்.
தவறு செய்யும் உடன் சகோதர சகோதரிகளுக்கு உதவ, இரக்கம் என்னும் விரல்கள் இல்லாத கைகள் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றும், இத்தகைய இரக்கமில்லா கைகளை இணைத்து செபித்தால் அச்செபம் விண்ணுலகைச் சென்றடையாது என்றும் எடுத்துரைத்தார்.
தனது உடலையும் இரத்தத்தையும் நமக்கு பகிர்ந்தளித்த இயேசுவின் கிறிஸ்துவின் கைகளைப் போல நற்கருணை, அதனுடன் இணைந்த பணிவான, மகிழ்ச்சியான மற்றும் உண்மையான நன்றியுடன் செயல்களைச் செய்யுங்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஆண்டவரின் கரங்கள், பாடகர் குழுவை வழிநடத்துபவர் போல உள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, பாடகர்குழு வழிநடத்துனர் எவ்வாறு தனியாக பாடுபவர் மற்றும் குழுப்பாடகர்களை தன் விரல் அசைவால் இயக்கி செயல்பட வைக்கின்றாரோ அதுபோல உயிர்த்த இயேசுவும் ஒவ்வொரு முறையும் நம்மைப் பார்த்து கையசைத்து இது உங்கள் முறை இணைந்து செல்லுங்கள் என்றும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்தார்.
முழு திருஅவையின் நற்செய்திப்பணி, ஆராய்ச்சி, உரையாடல், காலத்தின் அறிகுறிகளைப் பகுத்தறிதல் மற்றும் பல்வேறு கலாச்சார வெளிப்பாடுகளைக் கேட்பதில் தூயஆவியின் வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்த செல்வத்தின் ஒரு பகுதியாக உள்ளார்கள் என்றும், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலுக்கும் கிறிஸ்துவின் உண்மையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் பணிக்கும் சிறப்பான தனித்துவத்துடன் திகழ்கிறார்கள் என்றும், அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்