கடவுள் நமக்கு வழங்கிய உயரிய கொடை திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுள் எப்போதும் புதிதானவர், ஏனென்றால் அவர் அழகு, பரிவிரக்கம் மற்றும் உண்மைக்கு ஆதாரமாகவும் காரணமாகவும் இருக்கிறார் என்றும், கடவுள் ஒருபோதும் திரும்பத் திரும்ப வருவதில்லை, அவர் நம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறார், புதியவற்றைக் கொண்டுவருகிறார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மிகச் சிந்தனைகளைத் தொகுத்து "God is Always New" அதாவது, ‘கடவுள் எப்போதும் புதிதானவர்’ என்ற தலைப்பில் Luca Caruso அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறந்த இறையியல் பேராசிரியரான பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தனது முழு சுதந்திரத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் தனது இளம் பருவத்திலிருந்தே தன்னைக் கவர்ந்த இயேசுவின் விந்தையை இன்னும் அதிகமாக ஊடுருவ முயன்ற அவரது ஆன்மிக ஆழத்தினை இந்நூல் வெளிக்கொணர்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பதினாறாம் பெனெடிக்ட்டின் ஆன்மிகச் சிந்தனைகள் அடங்கிய இந்நூலில், கிறித்தவத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை ஆய்ந்தறியும் அவரின் படைப்புத்திறன், மொழி, மற்றும், பார்வை ஆகியவற்றின் வழியாக ஒருவரின் வாழ்க்கையில் கடவுளை வரவேற்கும் விலைமதிப்பற்ற கொடையை வளர்ப்பதற்கு தொடர்ச்சியான தூண்டுதலாக அமைகிறது இந்நூல் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருநூல்கள் மற்றும் திருஅவைத் தந்தையர்களை அடிப்படையாகக் கொண்ட திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் சிந்தனையின் ஆழம் இன்றும் நமக்கு உதவியாக உள்ளது என்று தனது அணிந்துரையில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆன்மிகப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நமது கிறிஸ்தவம் எந்தெந்த வழிகளிலெல்லாம் தூண்டுதலாக அமைந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களை நமக்குக் கொடையாகக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிந்தனை, ஆய்வு, செவிமடுத்தல், உரையாடல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, திருஅவைக்குப் பணியாற்றுவதும், மனிதகுலம் அனைத்திற்கும் நன்மை செய்வதும் சாத்தியமாகும் என்று அவருடைய வார்த்தை மற்றும் சான்று வாழ்வு வழியாக நமக்குக் கற்பித்துள்ளார் என்றும் விவரித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்