தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

எவரையும் புறம்தள்ளாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதை நம் வாழ்வு நடவடிக்கைகளின் மையமாக்கி, உடன்பிறந்த உணர்வு மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதியைக் கட்டியெழுப்புவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உடன்பிறந்த உணர்வு மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதியைக் கட்டியெழுப்பவும், நீதிக்கு உறுதி வழங்கவும், கடந்த கால காயங்களிலிருந்து வெளிவரவும் இயலும் என தன் செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

உலகில் சரிநிகர் நிலை குறித்த ஐந்தாவது பன்னாட்டு கருத்தரங்கில் கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய சமூக மற்றும் அரசியல் சூழல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொணரும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளையும் உடன்பிறந்த உணர்வையும் மக்களில் எழுப்ப முனையும் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து தன் செய்தியில் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எவரையும் புறம்தள்ளி வைக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, கலந்துரையாடல்கள் இன்றியமையாதவை என்பதை, தான் அண்மையில், திருப்பீடத்திற்கான பல நாடுகளின் தூதுவர்களை சந்தித்தபோது எடுத்துரைத்ததை இச்செய்தியில் மீண்டும் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.

ஒருவரையொருவர் எவ்வித முந்நிபந்தனைகளும் இன்றி அன்புகூர்வதற்கு நாம் நம் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதை நம் வாழ்வு நடவடிக்கைகளின் மையமாக்கி, உடன்பிறந்த உணர்வு மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதியைக் கட்டியெழுப்பவும், நீதிக்கு உறுதி வழங்கவும், பழைய காயங்களை குணப்படுத்தவும் இயலும் என மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2023, 14:22