தேடுதல்

இறைவார்த்தை, மனமாற்றம், குணப்படுத்தலுக்கு அழைப்புவிடுக்கிறது

தங்கள் வாழ்வில் இறைவார்த்தையை அறிவிப்பதை மையமாக வைத்துள்ள எல்லாருக்கும் நன்றி - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இறைவார்த்தை, அனைவருக்கும் உரியது, இது நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது மற்றும், கடவுளின் எல்லையற்ற அன்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக நம்மை ஆக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியில் கூறினார்.  

சனவரி 22, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, காங்கோ, பிலிப்பீன்ஸ், மெக்சிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திருவழிபாட்டு பொதுநிலை வாசகர்கள் மற்றும், மறைக்கல்வி ஆசிரியர்கள் என ஏழு பேரை ஆசிர்வதித்து அவர்களுக்கு திருவிவிலியம் மற்றும் திருச்சிலுவைகளை அளித்தார்.

"நாங்கள் கண்டதை, உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1யோவா.1:3) என்ற தலைப்பில், சனவரி 22, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நாசரேத்தில் அமைதியான வாழ்வு வாழ்ந்தபின்னர் அவர் எவ்வாறு பொதுப் பணியில் ஈடுபட்டார் என்பது குறித்து இன்றைய நற்செய்தியில் (மத்.4:12-22) நாம் வாசிக்கிறோம் என்று கூறினார்.

“மனம் மாறுங்கள் என எல்லாருக்கும் அழைப்புவிடுக்கின்ற இயேசு, தம் முதல் சீடர்களை அழைக்கிறார், மற்றும், கடவுள் நம் அனைவர் மீதும் கொண்டிருக்கும் வரம்பற்ற அன்பின் நற்செய்தியைப் பரப்பும் மறைப்பணியை கொடுக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இந்த இயக்கம், இறைவார்த்தை எவ்வாறு அனைவருக்கும் உரியது, இது அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கிறது மற்றும், நற்செய்தியை அறிவிப்பவர்களாக ஆக்குகிறது என்று கூறினார்.

இறைவார்த்தை அனைவருக்கும் உரியது

இயேசு எப்போதும் திருப்பயணியாக, மற்றும், பயணம் மேற்கொள்பவராக இயங்கினார், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றார், அவர் மக்களைச் சந்தித்தார், நோயாளிகளைக் குணமாக்கினார், பாவிகளை மீட்கவும், வழிதவறிய ஆடுகளை ஒன்றுகூட்டவும் விரும்பினார், சோர்ந்திருக்கும் இதயங்களைத் தூக்கிவிட்டார், மொத்தத்தில்  கடவுளின் இரக்கம் எல்லாருக்கும் உரியது என நம்மிடம் சொல்வற்கு வந்தார், ஆதலால், கடவுளின் இரக்கம் எல்லாருக்கும் உரியது என்பதை நாம் மறக்கக் கூடாது என்று திருத்தந்தை கூறினார்.

நற்செய்தி அறிவிப்புக்கு முன்னுரிமை

இறைவார்த்தையான இயேசு நம் எல்லாருக்கும் ஒரு கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதால், நமது  நற்செய்தி அறிவிப்புப்பணி, திறந்த மற்றும் பரந்த இதயத்தோடு இடம்பெறவேண்டும், மூடிய இதயத்தோடு ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, இறைவார்த்தையை நம் வாழ்வில் மையமாக வைக்க இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்தார்.   

மனமாற்றம்

இறைவார்த்தையின் வாழ்வளிக்கும் செய்தியைக் கேட்டபின்னர், முந்தைய நிலையிலேயே நாம் இருக்க இயலாது எனவும், கடவுளின் நன்மைத்தனத்தின் ஒளியைக் காணவும் அதற்கு நம் வாழ்வில் எவ்வாறு இடம் அளிப்பது என்பதை அறியவும் அது உதவுகின்றது எனவும் உரைத்த திருத்தந்தை, மனம் மாறவும், வாழ்வியலை மாற்றவும் இறைவார்த்தை அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறது என்று கூறினார்.

சொல்லில், செயலில் சான்று பகர்தல்

நம்மை நற்செய்தியை அறிவிப்பவர்களாக ஆக்குகின்ற இறைவார்த்தைக்கு வாரத்தையாலும் செயலாலும் சான்று பகர அழைப்புவிடுக்கப்படுகின்றோம் என்றும், கலிலேயாக் கடலோரமாய் நடந்துசென்ற இயேசு, சீமோனையும் அந்திரேயாவையும் தம்மைப் பின்செல்லுமாறு அழைத்தார், மற்றும், மனிதரைப் பிடிப்போராக்குவேன் என்று கூறியதுபோன்று நாமும், நற்செய்தியின் மகிழ்வை அறிவிப்பதில் நம் சகோதரர், சகோதரிகளைச் சந்திக்க அழைக்கப்படுகிறோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உங்களுக்கு நன்றி

தங்களின் வாழ்வில் இறைவார்த்தையை அறிவிப்பதை மையமாக வைத்துள்ள எல்லாருக்கும் தன் மறையுரையின் இறுதியில் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை மீதுள்ள தங்களின் அறிவை ஆழப்படுத்துவோருக்கு, அதனைப் பரப்பும் மேய்ப்புப்பணியாளர்களுக்கு, வேதியர்களுக்கு, மற்றும், திருப்பலி வாசகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மீட்பின் இறைவார்த்தையை அறிவிக்கும் இனிமைமிகு மகிழ்வு, அனைவருக்கும் ஆறுதலாகவும் பலனளிப்பதாகவும் இருக்கட்டும் என வாழ்த்தி தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து கத்தோலிக்கரும் தங்களின் திருவிவிலிய அறிவை அதிகமதிகமாய் வளர்த்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறை இறைவார்த்தை ஞாயிறாக 2019ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2023, 13:09