தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு - திருத்தந்தை

நம்பிக்கை என்பது கேட்டுப்பெற வேண்டிய முன்னுரிமையன்று அது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம்பிக்கை என்பது கேட்டுப்பெறவேண்டிய உரிமை அல்ல மாறாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 28 சனிக்கிழமை, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுள் அன்பின் அழகை நமது வாழ்வில் பரப்புபவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் அழகை நம் வாழ்வில் எங்கும் பரப்ப வேண்டும் எனவும், நம்பிக்கை என்பது கேட்டுப்பெற வேண்டிய முன்னுரிமையன்று அது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு எனவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், ஓரினச்சேர்க்கை மற்றும் பாவம் குறித்து இயேசு சபை அருள்பணியாளரான ஜேம்ஸ் மார்ட்டினுக்கு எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு வெளியே ஒரு பாவம் என்றும், திருமணத்திற்குப் புறம்பான ஒவ்வொரு பாலியல் செயலுமே பாவம் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

குற்றத்தை குறைக்கும் அல்லது இரத்து செய்யும் சூழ்நிலைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், என்று அடிக்கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, கத்தோலிக்க ஒழுக்கம், இவ்விடயத்தில் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து தனிநபர் சுதந்திரம் மற்றும் நோக்கத்திற்கு மதிப்பளிக்கின்றது என்றும், இது எல்லாவகையான பாவங்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கடிதத்தில், ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராகவும் இறைவனைத் தேடும் நல்ல எண்ணம் கொண்டவராகவும் இருந்தால், அவரை நியாயந்தீர்க்க நான் யார்? என்பது கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2023, 12:34