தேடுதல்

புலம்பெயர்ந்து செல்லும் உக்ரேனிய மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் உக்ரேனிய மக்கள்  

உங்களை என் இதயத்தில் சுமந்துள்ளேன் : திருத்தந்தை

உக்ரைன் என்னும் அன்னைக்காக அனைவரும் அமைதியான மனநிலையில் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நான் உங்களுடன் நெருக்கமாக இருக்கிறேன் என்றும், உங்களின் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கியிடமிருந்து நாட்டின் நிலைகுறித்து வழக்கமான செய்திகளை பெறுகிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 25, இப்புதனன்று, தனது மறைக்கல்வி உரைக்கு முன்பாக Pan-Ukrainian-இன் தலத் திருஅவைகள் மற்றும் துறவற அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் மேற்கொண்ட மிகக் குறுகிய சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரேனிய மக்களின் பிரதிநிதிகளுடன் நான் உரையாடலில் இருக்கிறேன் என்றும் உங்களுக்காக நான் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

நீங்கள் ஒன்றிணைந்து இருப்பதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்றும் ஒரு குடும்பத்தின் அன்னை நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, பல்வேறு இடங்களிலும் இருக்கும் அவரது குழந்தைகள் இணைந்து வந்து அவரருகில் இருப்பது போன்ற உணர்வை இது எனக்கு ஏற்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது யூத உக்ரைன், கிறிஸ்தவ உக்ரைன், ஆர்த்தடாக்ஸ் உக்ரைன், கத்தோலிக்க உக்ரைன், இஸ்லாமிய உக்ரைன் என்றெல்லாம் இல்லை, மாறாக, இது ஒரே தாய் என்ற உக்ரைன் என்றும், இது அனைத்தையும் ஒன்றாகப் பார்ப்பது என்றும், சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களின் ஒற்றுமை உங்கள் இனத்தின் வலிமையைக் காட்டுகிறது என்றும், இன்று நம் கலாச்சாரத்தில் நாம் காணும் மேலோட்டமான தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

சந்தேகம் வேண்டாம், நான் உங்களுக்காக இறைவேண்டல் செய்கிறேன்! நான் உங்களை என்  இதயத்தில் சுமந்துகொண்டுள்ளேன், துணிவு நிறைந்த உங்கள்மேல் பரிவிரக்கம் காட்ட இறைவனை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 13:41