துயருறும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, நைஜீரியாவில் கொல்லப்பட்ட அருள்பணியாளருக்காகவும், போரால் உக்ரைனில் துயருறும் மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு திருப்பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜனவரி 18, இப்புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் தான் வழங்கிய புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு அங்குக் கூடியிருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்படும் அனைத்து கிறிஸ்தவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறும் விண்ணப்பித்தார்.
குறிப்பாக, வடக்கு நைஜீரியாவிலுள்ள மின்னா மறைமாவட்டத்தில் Kafin-Koro என்ற பங்குத்தளத்தில் பங்குத் தந்தையின் இல்லத்திலேயே அடையாளம் தெரியாத நபர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட அருள்பணியாளர் Isaac Achi அவர்களை குறிப்பிட்டு பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைனுக்காக இறைவேண்டல் செய்வோம்
அதன்பிறகு, போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களை நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்காக இறைவேண்டல் செய்வதற்குத் திருப்பயணிகள் ஒவ்வொருவரிடமும் வேண்டுகோள்விடுத்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும், நெருக்கமும், அனைத்திற்கும் மேலாக அமைதியும் அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஜனவரி 14, கடந்த சனிக்கிழமையன்று, உக்ரைனின் Dnipro நகரில் நிகழ்ந்த அண்மைய ஏவுகணைத் தாக்குதலையும் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதலில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும், குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயப்பட்டுள்ள வேளை, அவர்களின் இதயத்தை உடைக்கும் இப்பெருந்துயரில் தானும் பங்கேற்பதாகக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்