காங்கோ தாக்குதலில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் Kasindi-விலுள்ள பெந்தக்கோஸ்து வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதல் அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமானதை அறிந்து தான் மிகவும் துயருற்று இருப்பதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காங்கோ குடியரசிலுள்ள கிறிஸ்துவின் திருச்சபையின் தலைவர் மேதகு André Bokundoa-Bo-Likabe அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதலில் காயமடைந்துள்ள அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கனிவான இரக்கத்தையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாவும் கூறியுள்ளார்.
ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரிலுள்ள Kasindi என்னுமிடத்தில் ISIS அமைப்புடன் தொடர்புடைய AFP அமைப்பின் தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டும், 40-க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ள வேளையில், வாழ்வளிக்கும் ஆண்டவராம் இயேசு, இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஆறுதலையும், இறைநம்பிக்கையையும், மற்றும், அமைதியின் கொடையையும் அருள்வாராக என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 31-ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை, தென்சூடானின் ஜூபாவிற்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவுள்ள வேளை, இத்துயர நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இதுவரையில், ஏறத்தாழ 60 இலட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் பலர் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் ஐ.நா. அவையின் புள்ளிவிபரம் ஒன்று எடுத்துக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்