தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - இயேசு அறிவிப்பின் தலைவர்

இயேசு, மகிழ்ச்சி, விடுதலை, ஒளி, குணப்படுத்துதல் மற்றும் அருள் ஆகியவற்றை அளித்து, அறிவிப்பின் தலைவராக நமக்கு வழிகாட்டுகின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் நேரமும் அருளின் நேரம். கடவுளின் இரக்கம், மன்னிப்பு வழியாக அவரது அன்பு மகனாகிய இயேசுவின் நற்செய்திக்கு சாட்சியாக இருக்க ஒரு புதிய வாய்ப்பு என்றும், அப்போஸ்தலிக்க பேரார்வத்தைப் பின்பற்ற விரும்பும் நமக்கு இயேசு அறிவிப்பின் தலைவராக இருக்கின்றார் என்பதை வலியுறுத்தியும், சனவரி 25 புதன்கிழமை வத்திக்கானின்  திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு மறைக்கல்வி உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். லூக்கா நற்செய்தியில் பிரிவு 4ல் உள்ள 17 முதல் 21 வரையிலான இறைவசனங்கள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது மறைக்கல்வி உரையைத் துவக்கினார் திருத்தந்தை.

இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். (லூக்கா 4 17- 21)

ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.
ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

கடந்த புதன் கிழமை நாம் இயேசுவின் மாதிரியைப் பிரதிபலித்தல் மற்றும் எப்போதும் மற்றவர்களைச் சென்றடையும் ஆயனுக்குரிய அவரது இதயத்தைப் பற்றி சிந்தித்தோம். அறிவிப்பின் மாதிரியான இயேசு இன்று நமக்கு அறிவிப்பின் தலைவராக உள்ளார் என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். தனது கிராமமான நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் செபிக்கும் போது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து ஒரு பகுதியை வாசித்த இயேசு, நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று என்று கூறி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றார். இறைவார்த்தையின் வழியாக தன்னைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை வெளிப்படுத்திவிட்டார் இயேசு. இயேசுவின் இந்த அறிவிப்பில் ஐந்து அடிப்படைக் கூறுகளை காணலாம்.

1. மகிழ்ச்சி.

ஆண்டவருடைய ஆவி என்மேல் இருக்கிறது; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஆண்டவர் என்னை அனுப்பினார் என்ற நல்ல செய்தியை எடுத்துரைக்கின்றார் இயேசு. மகிழ்ச்சி இல்லாமல் இயேசுவைப் பற்றி நம்மால் பேச முடியாது. மகிழ்ச்சி இல்லாதபோது, ​​நற்செய்தி கடந்து செல்லாது. ஏனெனில், நற்செய்தி என்பது நல்ல செய்தி, மகிழ்ச்சியின் செய்தி. வருத்தமான மன நிலையில் உள்ள கிறிஸ்தவர் அழகான விஷயங்களைப் பற்றி பேசலாம், ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் அதை அறிவிக்காவிட்டால் அது வீண்.

2. விடுதலை.

சிறைபட்டோர்க்கு விடுதலையை அறிவிக்க தான் அனுப்பப்பட்டுள்ளதாக இயேசு கூறுகிறார். கடவுளை அறிவிக்கும் எவரும் மதமாற்றம் செய்யவோ, அழுத்தம் கொடுக்கவோ, சுமைகளை இலகுவாக்கவோ முடியாது. சுமைகளை சுமத்துவதற்கு அல்ல, ஆனால் அவற்றை தூக்கி எறியவும்,   குற்றத்தை அல்ல அமைதியைக் கொண்டு வருவதுமே, உண்மையான விடுதலை என்கின்றார். இயேசுவைப் பின்பற்றுவது என்பது தியாகங்களை உள்ளடக்கிய துறவு. கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர், பயணத்தின் சோர்வைக் காட்டிலும் இலக்கின் அழகைக் காட்டுபவராக இருக்க வேண்டும் என்றும்,  மீட்பருக்குத் தகுதியான ஒவ்வோர் அறிவிப்பும் விடுதலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார் இயேசு.

3. ஒளி.

பார்வையற்றோர் பார்வை பெறுவதற்காக வந்ததாக இயேசு கூறுகிறார். இங்கு உடல் உறுப்பில் உள்ள பார்வையைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கையை ஒரு புதிய வழியில் பார்க்க நம்மை அனுமதிக்கும் ஒளி பற்றியது. ஒரு பிறப்பு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது, மறுபிறப்பு இயேசுவுடன் மட்டுமே நிகழ்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையும் தொடக்க காலங்களில் "அறிவொளி" என்று அழைக்கப்பட்ட திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வழியாக  தொடங்கியது. இயேசு நமக்கு கடவுளின் பிள்ளைகள் என்ற ஒளியை அளிக்கின்றார். அவர் தந்தையின் அன்பு மகன், என்றென்றும் உயிருடன் இருப்பவர். தவறுகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், என்றென்றும் அன்பு செய்யப்படும் கடவுளின் குழந்தைகள் நாம் என்பதை வலியுறுத்துகின்றார்.

4. குணப்படுத்துதல்.

"ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய  வந்ததாக இயேசு கூறுகிறார் ஒடுக்கப்பட்டவர் என்பது வாழ்க்கையில் நோய், சோர்வு, இதயத்தில் சுமைகள், குற்ற உணர்வுகள், தவறுகள், தீமைகள், பாவங்கள் என ஏதாவதொன்றால் நசுக்கப்படுபவர்கள். பாவத்திலிருந்து இயேசு நம்மை எப்போதும் குணப்படுத்துகிறார். சுமை சுமந்து சோர்ந்து போன அனைவரையும் தன்னிடம் வரும்படி அவர் அழைக்கிறார். நமது வாழ்க்கையை மேம்படுத்துகிறார். கடவுளின் மன்னிக்கும் சக்தி, நமது ஆன்மாவை எல்லாக் கடனிலிருந்தும் விடுவிக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றார்.

5. இரக்கம்

“ஆண்டவர் அருள்தரும் ஆண்டை அறிவிக்க வந்ததாக" இயேசு கூறுகிறார். கிறிஸ்துவுடன் இணைந்து நமது வாழ்க்கையை புதியதாக்குகிறது அருள். இயேசுவின் அறிவிப்பு எப்போதும் அருளின் வியப்பைக் கொண்டுவர வேண்டும். பெரிய காரியங்களைச் செய்வது நாம் அல்ல, நம் வழியாக கணிக்க முடியாத காரியங்களைச் செய்வது இறைவனின் அருளாகும். கடவுளின்  அருள் ஆச்சரியங்கள், வியப்புக்களுக்கு நற்செய்தியில் புதுமை என்ற ஒரு பெயர் உள்ளது:

புதன் பொதுமறைக்கல்வி உரையின் போது திருத்தந்தை
புதன் பொதுமறைக்கல்வி உரையின் போது திருத்தந்தை

இயேசு, மகிழ்ச்சி, விடுதலை, ஒளி, குணப்படுத்துதல் மற்றும் அருள் ஆகியவற்றை அளித்து, அவர் விரும்பியபடி அதை அறிவிக்க நமக்கு உதவுகிறார். இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு, நற்செய்தி கூறுவது போல, ஏழைகளுக்கு என்பதை மறந்து விடக்கூடாது இவர்கள் இயேசுவால் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்ட பெறுநர்கள், கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். அவர்களை நினைவில் கொள்வோம், கடவுளை வரவேற்க, நாம் ஒவ்வொருவரும், உள்ளத்தில் ஏழைகளாக மாற வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். கடவுளின் அருளால், இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் சக்தியை அனுபவித்த நாம், இந்த அற்புதமான பரிசுக்கு நன்றி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இதனை மற்றவர்களுடன் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் நேரமும் அருளின் நேரம், கடவுளின் இரக்கம், மன்னிப்பு வழியாக அவரது அன்பு மகனாகிய இயேசுவின் நற்செய்திக்கு சாட்சியாக இருக்க ஒரு புதிய வாய்ப்பு என்பதை உணர்வோம்.

இவ்வாறாக தன் புதன் பொது மறைக்கல்வியுரையை  நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இன்றைய பார்வையாளர்களில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை வரவேற்றார். கிறிஸ்தவ ஒன்றிப்பின் வாரத்தை சிறப்பித்து கொண்டிருக்கும் வேளையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, போசே கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவிற்கும் தனது சிறப்பு வாழ்த்துக்களை வழங்கினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 10:26