தேடுதல்

இளையோரே திறந்த மனம் கொண்டு வாழுங்கள் – திருத்தந்தை

இளையோரே, சுவர்களை அல்ல தொடுவானத்தின் எல்லையைக் காண, முயற்சியுங்கள்- திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளையோர் தங்களது வாழ்க்கையில் சுவர்களைக் கட்டாமல் பல்வேறு கலாச்சாரங்களுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ வேண்டுமென்றும், அருகில் அல்ல மாறாக எப்போதும் தொலைவில் உள்ள தொடுவானத்தைக் காண முயல்பவர்களாக வாழவேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 20 வெள்ளிக்கிழமை, லிஸ்பனில் இவ்வாண்டு கொண்டாடப்பட இருக்கும் உலக இளையோர் நாளை முன்னிட்டு அவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்களுக்கும், முன்பதிவு செய்துள்ள இளையோர்க்கும் காணொளிக் காட்சி வழியாக தனது வாழ்த்துச் செய்தியினைத் தெரிவித்தபோது இவ்வாறுக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2023 ஆகஸ்ட் மாதம் லிஸ்பனில் கொண்டாடப்பட இருக்கும் உலக இளையோர் நாளுக்கு  இன்னும் சில மாதங்களே இருந்தாலும், அந்நிகழ்வில் பங்கேற்க தங்கள் பெயரை இதுவரை  முன்பதிவு செய்துள்ள 4 இலட்சம் இளையோர்க்கு தனது வாழ்த்தை காணொளிக் காட்சி ஒன்றின் வழியாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக இளையோர் ஆண்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஏராளமான இளையோர்கள் வருவது தனக்கு ஆச்சரித்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது எனவும், நான் சுற்றுலாவிற்கு செல்கிறேன் என்ற மனநிலையுடன் இந்நிகழ்வில் பங்கேற்கும் இளையோர் கூட தங்களது ஆழ்மனதில் பங்கேற்பு, கலந்துகொள்ளல், அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளல், மற்றவரின் அனுபவத்தைப் பெறுதல் போன்றவற்றைப் பெற  தாகமாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

வாழ்க்கைக்கு முன் சுவர்களைக் கட்டாமல், திறந்த மனதுடனும் இதயத்துடனும் பிற கலாச்சாரங்களுடன் ஒன்றிணைவதன் வழியாக கீழ்வானத்தைக் காண இளையோர் முயற்சி செய்ய வேண்டும் என்றும்  சுவர்களை அல்ல தொடுவானத்தைக் காண முயற்சியுங்கள் என்றும் அக்காணொளியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2023, 13:25