தேடுதல்

Roman Rota உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Roman Rota உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருமணம் கடவுளிடமிருந்து வரும் பரிசு – திருத்தந்தை

திருமணம் எப்போதும் ஒரு பரிசு! அதன் நம்பகத்தன்மை தெய்வீக நம்பகத்தன்மையின் மீது தங்கியுள்ளது,தெய்வீக பலனை அடிப்படையாகக் கொண்டுள்ளது – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருமணம் என்பது எப்போதும் கடவுளிடமிருந்து வரும் பரிசு என்றும் திருஅவையின்  மேய்ப்புப்பணியின் பிரதிபலிப்பாகவும், நற்செய்தியை அறிவிப்பதற்கான முக்கியமாக தளமாகவும் குடும்பம் செயல்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான,  திருஅவையின் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள் ஏறக்குறைய 250 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமணம் எப்போதும் ஒரு பரிசு! அதன் நம்பகத்தன்மை தெய்வீக நம்பகத்தன்மையின் மீது தங்கியுள்ளது,தெய்வீக பலனை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும் ஆணும் பெண்ணும் இந்தப் பரிசை வரவேற்கவும், சுதந்திரமாக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும் இதன் வழியாக அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் மேய்ப்புப்பணியில், நீதிபதிகளின் பணி முக்கியமானது என்றும், குடும்பம், கிறிஸ்தவ திருமணம் ஆகியவற்றில் கவனமும் அக்கறையும் காட்டுவதில் நாம் மனந்தளரக் கூடாது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதிபதிகளின் ஒவ்வொரு தீர்ப்பிலும் செயல்படும் தூய ஆவியார், பிள்ளைகளின் நலன், அவர்களின் மனஅமைதி, திருமண முறிவால் ஏற்படும் மகிழ்வின்மை ஆகியவற்றை தீர்ப்பின்போது மறக்காமல் இருப்பதற்கு உதவுவாராக என்றும் கூறினார்.

rota romana  நீதிபதிகளுடன் திருத்தந்தை
rota romana நீதிபதிகளுடன் திருத்தந்தை

மனித பலவீனம் மனித அன்பின் நிலையற்ற தன்மையை புறக்கணிப்பது போல் தெரிந்தாலும், அதன் கரையாத தன்மை பெரும்பாலும் ஓர் இலட்சியமாக கருதப்படுகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, மனித அன்பு, பலவீனமான மற்றும் வரையறுக்கப்பட்ட ஒன்று என்றாலும், எப்போதும் உண்மையுள்ள மற்றும் இரக்கமுள்ள தெய்வீக அன்பை திருமணத்தின் வழியாக சந்திக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், என்ற இயேசுவின் கட்டளை திருமணத்திற்குப் பொருந்தும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வரமாகக் கொடுக்கப்பட்ட கணவன் மனைவி இக்கட்டளையை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவேண்டுமெனவும், அவர்களுக்கு இடையேயான அன்பு நிலைத்து நிற்க, தூய்மை, முதிர்ச்சி, புரிந்து கொள்ளல், மற்றும் மன்னிப்பு தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.

நம் கைகளில் முழுமையடையாமல் உணரப்படும் கடவுளின் திட்டம், உண்மையான மற்றும் உறுதியான குடும்பத்தில் நிகழும் துன்பங்கள், போராட்டங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் தினசரி தீர்மானங்களில் இறைவன் உடனிருப்பு நம்முடன் இருந்து இறைத்திட்டம் நிறைவேறுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்ப அன்பினால் ஆன்மீகம், ஒற்றுமை, அர்ப்பணம், மனித மற்றும் தெய்வீக மதிப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டு, தெய்வீக அன்பால் வாழும் உறவின் ஆன்மீகமாக சிறப்புறுகின்றது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2023, 13:53