தேடுதல்

SERMIG அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் SERMIG அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கடவுளின் கனவை நனவாக்கும் SERMIG அமைப்பு – திருத்தந்தை

1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தூரினில் சிறிய விதையாக தொடங்கப்பட்ட SERMIG அமைப்பு இப்போது, இளையோர் மறைபரப்புப் பணியை மிகத்தீவிரமாக செய்து வருகின்றது - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவ அமைப்புக்களின் செயல்பாடுகள் எண்ணிக்கையின் அளவை அல்ல மாறாக அவை நற்செய்தியினை அடையாளப்படுத்துகின்றன எனவும் SERMIG அமைப்பின் செயல்பாடுகள் கடவுளது கனவின் பலன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 07 சனிக்கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் இத்தாலியின் SERMIG எனப்படும் இளையோர் மறைபரப்பு அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 300 பேரை சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறுக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

என்னைப்பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நற்செய்தி வார்த்தைகளுக்கேற்ப SERMIG அமைப்பு இயேசுவில் இணைந்து கனி தருகின்றது என்றும் தானாக அவற்றை செய்யவிலை மாறாக இறைவனிடத்தில் அதை ஒப்படைத்துச் செய்கின்றது  எனவும் பாராட்டிக்  கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கேற்ப செயல்படும் SERMIG அமைப்பு இளையோர் மறைபரப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு கடவுளின் கனவினை நனவாக்கி வருகின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

SERMIG அமைப்பின் வழியாகத் தூயஆவி வல்லமையுடன் செயல்பட்டு கடவுள் வரலாற்றில் முன்னேறிச் செல்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் அவ்வமைப்பின் செயல்பாடுகள் கடவுளின் கனவை நனவாக்குவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

SERMIG அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
SERMIG அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

SERMIG அமைப்பு

1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தூரினில் சிறிய விதையாக தொடங்கப்பட்ட இவ்வமைப்பு இப்போது, இளையோர் மறைபரப்புப் பணியை மிகத்தீவிரமாக செய்து வருகின்றது என்றும், நற்செய்தியின் அடையாளங்களை வரலாற்று நிகழ்வுகளாகக் கொண்டுள்ளது எனவும், அதிலும் குறிப்பாக தூரின் இராணுவக் களஞ்சியத்தை அமைதிக்கான இராணுவக் களஞ்சியமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது எனவும் இத்தகைய சிறப்பான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செர்மிக் அமைப்பினை உருவாக்கிய எர்னஸ்டோ, அவரது மனைவி அடங்கிய முதல் குழுவின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் இன்று பல இளைஞர்களின் கனவாக மாறியுள்ளது எனவும் அமைதிக்கான ஆயுதங்கள் சந்திப்பு, உரையாடல், ஏற்றுக்கொள்ளல். வழியாக உருவாக்கப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்செனலில் இளைஞர்கள் சந்திக்கவும், உரையாடவும், வரவேற்கவும் உறுதியாகக் கற்றுக்கொள்ள முடியும் எனவும் நாம் மாறினால் உலகமும் மாறுகின்றது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பணியினைக் கடவுள் துணையின்றி செய்ய முடியாது எனவும், கடவுள் இல்லாமல் போர் செய்ய முடியும், ஆனால் அவருடன் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2023, 14:51