தேடுதல்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்  (2023 Getty Images)

அமெரிக்க துப்பாக்கிச் சூடு, எனக்கு மனவேதனையை தருகிறது

இறந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பங்களிலுள்ள அனைவர்மேலும் இறைவனின் ஆறுதல் மற்றும் குணப்படுத்துதலின் வல்லமை வந்திறங்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வார இறுதியில் கலிஃபோர்னியாவில் உள்ள Monterey பூங்காவில் சந்திர புத்தாண்டின் போது பதினொரு பேர் கொல்லப்பட்ட சோகமான துப்பாக்கிச் சூட்டுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 25, இப்புதனன்று, திருத்தந்தையின் பெயரில் Los Angeles பேராயர் José H. Gómez அவர்களுக்கு இவ்விரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்துயரச் சம்பவத்தில் இறந்த அனைவரின் ஆன்மாக்களும் நிறையமைதி அடைய தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக அவ்விரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பங்களிலுள்ள அனைவர்மேலும்  இறைவனின் ஆறுதல் மற்றும்  குணப்படுத்துதலின் வல்லமை வந்திறங்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜனவரி 22, இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நாங்கள் இறைவேண்டல் செய்கிறோம் என்றும், அவர்களின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் இறைவன் நெருக்கமாக இருக்க வேண்டுகிறோம் என்றும் கூறியுள்ளார் பேராயர் Gomez

ஜனவரி 21, சனிக்கிழமையன்று சந்திர புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கலிஃபோர்னியாவில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் Monterey பூங்காவில் உள்ள Star Ballroom Dance Studio-வில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ​​11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 14:21