கர்தினால் Pell-இன் அர்ப்பண வாழ்வு போற்றத்தக்கது : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
81 வயது நிரம்பிய ஆஸ்திரேலியவின் கர்தினால் George Pell ஜனவரி 19, இச்செவ்வாயன்று, உரோமையில் இறைபதம் அடைந்ததையொட்டி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், சோதனை வேளையிலும் விடாமுயற்சியுடன் தனது இறைவனைப் பின்தொடர்ந்தவர் அவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் Pell அவர்களின் நிலையான மற்றும் உறுதியான சான்று வாழ்வு, நற்செய்தி மற்றும் திருஅவைக்கான அவரது அர்ப்பணிப்பு, குறிப்பாகத் திருப்பீடத்துடன் அதன் அண்மைய பொருளாதாரச் சீர்திருத்தத்தில் அவர் விடாமுயற்சியுடன் ஒத்துழைத்தது, அதற்காக அவர் உறுதியுடனும் ஞானத்துடனும் அடித்தளம் அமைத்தது என எல்லாவற்றையும் அவ்விரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் பொருளாதாரச் செயலகத்தின் உயர் அதிகாரியான கர்தினால் Pell இறைபதம் அடைந்தார் என்ற செய்தி தன்னை அதிகம் வருத்தமடையச் செய்ததாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் அவையின் தலைவர் மற்றும் அனைத்துக் கர்தினால்களுக்கும், கர்தினால் Pell அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெருக்கத்தையும் செபத்தையும் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கர்தினால் Pell அவர்களின் சான்று வாழ்வு மற்றும் பணிக்காக அவரைப் பெரிதும் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோதனை வேளையிலும் விடாமுயற்சியுடன் தனது இறைவனைப் பின்பற்றிய இந்த உண்மையுள்ள பணியாளர் விண்ணக வாழ்வின் நிறைமகிழ்வைப் பெறவும், அவரது ஆன்மா இறைவனில் நிறையமைதி அடையவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்