உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
வருகிற அக்டோபரில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவதற்குமுன், ஆயர்களின் பணியை ஆண்டவரிடம் அர்ப்பணிக்கும் நோக்கத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாடு ஒன்று வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று, சனவரி 15, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை ஆற்றியபின்னர், ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 18 வருகிற புதனன்று தொடங்கும் இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், "நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்" (எச.1:17) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, பிரமாணிக்கம் மற்றும் பொறுமையோடு, முழு ஒன்றிப்பு நோக்கி தம் மக்களை வழிநடத்தும் ஆண்டவருக்கு, இவ்வார்த்தைகளின் ஒளியில் நாம் நன்றி கூறுவோம் என்று கூறினார்.
இக்கொடைகளோடு நாம் நிலைத்திருக்கத் தூய ஆவியார் ஒளியூட்டுமாறு இறைஞ்சுவோம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையும், திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்திற்கான மனமாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், வருகிற செப்டம்பர் 30ம் தேதி சனிக்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு திருவழிபாட்டை அறிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இத்திருவழிபாட்டில் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பணிகளைக் கடவுளிடம் அர்ப்பணிப்போம் எனவும், இவ்வழிபாட்டிற்கு வருகின்ற இளையோர் அவ்வாரம் முழுவதும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்துவார்கள் எனவும், அந்நிகழ்வு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தால் நடத்தப்படும் எனவும் திருத்தந்தை அறிவித்தார்.
இந்த இறைமக்களின் நிகழ்வில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் சகோதரர், சகோதரிகள் பங்குபெறுமாறு இப்போதிலிருந்தே அழைப்பு விடுக்கிறேன் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.
"ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளும் ஒரே திருஅவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி" என்ற தலைப்பில் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நிலை, வருகிற அக்டோபர் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும்.
அம்மாமன்றத்தின் இரண்டவது நிலை, 2024ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்