13 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளம் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவின் திருமுழுக்கு நாளின்போது 13 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்க திருஅவையின் பாதையை உறுதி செய்யும் பொறுப்பு அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.
சனவரி 08 ஞாயிறு, இறைவனின் திருமுழுக்குவிழாவை வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தபோது 13 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை அளித்து இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களை ஆலயத்திற்கு அழைத்து வந்த பெற்றோருக்கு தன் நன்றியினையும் தெரிவித்தார்.
திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வழியாக கத்தோலிக்க திருஅவைக்குள் நுழைந்த இக்குழந்தைகளுக்கு அவர்களின் பிறந்த நாளைப்போல திருமுழுக்கு நாளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், இதன் வழியாக அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கக் கற்றுக்கொள்ளட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.
திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவாக நாம் மாற கடவுள் கொடுத்த இக்கருணை மகிழ்வான நேரங்களில் கடவுளுக்கு நன்றி சொல்லவும், துன்பமான நேரங்களில் நமது வலிமையைக் கண்டறியவும் உதவும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இயேசுவின் திருமுழுக்கு, கிறிஸ்தவ பயணத்தின் தொடக்க நாள், கொண்டாட்டத்தின் நாள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, அப்பயணத்தில் தொடர்ந்து நிலைக்க, பயணிக்க பெற்றோர்கள் அக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
இறைவனின் திருமுழுக்கு விழா அன்று சிஸ்டைன் சிற்றாலயத்தில், குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கப்படும் வழக்கம் 1981 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்