அமைதித் திருப்பயணம் வெற்றியடைய இறைவேண்டல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நீண்ட கால மோதல்களால் துன்புறும் ஆப்ரிக்க நாடுகளுக்கு தன் திருத்தூதுப்பயணம் இடம்பெறவுள்ள வேளையில், அமைதிக்கான இத்திருப்பயணம் வெற்றியடைய இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 31ஆம் தேதி ஆப்ரிக்க நாடுகளான காங்கோ குடியரசு, தென்சூடான் ஆகியவைகளுக்கு திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நண்பகல் மூவேளை ஜெப உரையில், பயண வெற்றிக்கான செப விண்ணப்பத்தை முன்வைத்தார்.
ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இவ்விரு நாடுகளிலும் திருப்பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாடுகளில் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்த அதிகாரிகளுக்கும், பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் மக்களுக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.
தென் சூடானுக்கான தன் திருத்தூதுப்பயணம் அமைதிக்கான கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணமாக ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் பொதுஅவை ஒருங்கிணைப்பாளர், கிறிஸ்தவப் போதகர் Iain Greenshields ஆகியோருடன் இணைந்து இடம்பெற உள்ளதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆப்ரிக்காவின் இவ்விரு நாடுகளுக்கான தன் திருப்பயணம் வெற்றியடையவேண்டும் என இறைவேண்டல் செய்யுமாறு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
காங்கோ ஜனநாயக குடியரசில் சனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரையும், பிப்ரவரி 3 முதல் 5 வரை தென் சூடானிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்