கருணையுடன் நம்மை மீட்கும் கடவுளின் அன்பின் நீதி – திருத்தந்தை
மெரினா ராஜ் -வத்திக்கான்
இயேசு தான் பெற்ற திருமுழுக்கின் வழியாக உலகிற்குக் கொண்டு வர வேண்டிய நீதியை வெளிப்படுத்துகின்றார் எனவும், கடவுளின் நீதி தண்டிக்கும் நீதியல்ல மாறாக கருணையுடன் நம்மை மீட்கும் அன்பின் நீதி எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 08, ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் திருமுழுக்குவிழாவைத் திருஅவை கொண்டாடி மகிழ்ந்தவேளையில், மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
இயேசுவைப் போல நாம் ஒருவர் மற்றவரது சுமைகளைப் பகிரவேண்டும் எனவும், கருணையுடன் ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளுடைய நீதி, மறைநூல்களைக் கற்பிப்பது போல், மிகவும் பெரியது எனவும், அதன் நோக்கம் குற்றவாளிகளைத் தீர்ப்பிடுவதல்ல, கருணையுடன் அவர்களைப் பார்த்து அன்பினால் மீட்டு மறுபிறப்பளித்து நீதிமான்களாக்கும் அன்பின் நீதி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
அன்பின் நீதி
தீமையால் ஒடுக்கப்பட்டு, பாவங்கள் மற்றும் பலவீனங்களின் சுமையினால் கீழே விழும்போது தந்தையாகிய கடவுளின், இரக்கம், கருணையின்ஆழம் மற்றும் அன்பிலிருந்து வரும் நீதியினால் நாம் தூண்டப்படுகின்றோம் எனவும், இயேசுவின் சீடர்களாகிய நாமும், உடன்வாழ்பவர்கள், திருஅவை மற்றும் சமூகத்துடன் நீதியைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்களை நல்லவர் கெட்டவர் என்று பிரித்து கடுமையாக தீர்ப்பளித்து கண்டனம் செய்பவர்களைப் போல் அல்ல, மாறாக உடன் வாழ்பவர்களின் காயங்கள் மற்றும் பலவீனங்களை கருணையுடன் பகிர்ந்து கொள்பவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, பிரிப்பவர்களாக அல்ல பகிர்பவர்களாக இயேசுவைப் போல் ஒருவரை ஒருவர் கருணையுடன் பார்த்து உதவிகள் செய்து வாழவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்