தேடுதல்

செய்தியாளர் சந்திப்பின் போது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி. செய்தியாளர் சந்திப்பின் போது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.  (Vatican Media)

திருத்தந்தையின் காங்கோ பயணத்திட்டத்தில் மாற்றம்

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தென் சூடானின் பகுதிகளுக்குத் திருத்தந்தை பயணம் மேற்கொள்ள ஆவல் கொண்டபோதிலும், அங்கு நிகழ்ந்துவரும் அசாதாரண சூழல் அவரின் பயணத் திட்டத்தை மாற்றிவிட்டது.: மத்தேயோ புரூனி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ மற்றும் தென்சூடான் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் குறிப்பிடும்படியான அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை, தென்சூடானின் ஜூபாவிற்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிற வேளை, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் புரூனி.

இந்த நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்குக் கடந்த ஆண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும், அவரது உடல்நிலைக் காரணமாக அவரதுப் பயணம் இவ்வண்டிற்கு மாற்றியமைக்கப்பட்டது என்பதையும் செய்தியாளர்களிடம் விளக்கினார் புரூனி.

திருத்தந்தையின் பயணத் திட்டத்தில் மாற்றம் :

காங்கோ ஜனநாயகக் குடியரசுக்குச் செல்லும் திருத்தந்தை, வடக்கு Kivu-விலுள்ள Goma-வுக்குச் செல்வதாகத் திருத்தந்தையின் பயணத்திட்டத்தில் முன்பு இருந்தது. ஆனால், அப்பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் கலவரங்கள் காரணமாக அது தற்போது கைவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் புரூனி.

இதனால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சம் கொண்டுள்ளார் என்று பொருள்கொள்ளக்கூடாது என்று விளக்கியுள்ள புரூனி அவர்கள், திருத்தந்தை நிகழ்த்தவிருக்கும் திருப்பலிக்கு வரும் இறைமக்கள் யாருக்கும் எவ்வித கேடும் நேர்ந்துவிடக் கூடாது என்ற காரணத்தினாலே இப்பயணத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாவும் எடுத்துரைத்துள்ளார்.

4,00,000 மக்களைக் கொன்றுகுவித்த ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2018-ஆம் ஆண்டில் உலகின் இளைய தேசமான இங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஆனால், பசி, வன்முறை மற்றும் ஆட்சியின்மை ஆகியவற்றால் துயருற்றுவரும் மக்களை அரசியல் கலவரம், வறுமை, இனப் பகை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை தொடர்ந்து பேரழிவிற்கு உட்படுத்தி வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 13:38