திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்   (ANSA)

திருத்தந்தை பெனடிக்டிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை

தலாய் லாமா: மத நல்லிணக்கம், சுற்றுச்சூழல், மனிதகுல மதிப்பீடுகள் போன்றவைகளுக்காக உழைத்து ஓர் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தவர் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் மறைவையொட்டி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் புத்தமதத் தலைவர் தலாய் லாமா.

இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்கு தன் இரங்கல் செய்தியை பீகார் மாநிலத்தின் போத்கயாவிலிருந்து அனுப்பியுள்ள தலாய் லாமா அவர்கள், நம் ஆன்மீக சகோதரருக்காக இறைவனிடம் செபிப்பதாகவும், கத்தோலிக்க திருஅவையின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் அனுதாபங்களை வெளியிடுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

தான் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களை சந்தித்தபோது, மனிதகுல மதிப்பீடுகள், மத நல்லிணக்கம், சுற்றுச்சூழல் போன்றவைகளில் தனக்கும் திருத்தந்தைக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்ததை காணமுடிந்தது என்றும், இந்த மதிப்பீடுகளுக்காக தன் திருத்தந்தை பணியின்போது அதிகம் அதிகமாக உழைத்து, அர்த்தமுள்ள ஒரு வாழ்வை வாழ்ந்தவர் அவர் என தலாய் லாமா தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க சமூகத்துடன் கலந்துரையாடல்களில் தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பங்கேற்றுள்ளதாகவும், அதன் வழி கத்தோலிக்க மற்றும் புத்த மதங்களிடையே நல்ல மத புரிந்துகொள்ளுதலுக்கு பங்காற்றியதை எண்ணிப்பார்க்க முடிகிறது என தன் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள புத்தமத தலைவர் தலாய் லாமா அவர்கள், பல்வேறு பதட்ட நிலைகளை இவ்வுலகின் பல்வேறு பகுதிகள் சந்தித்துவரும் இன்றைய சுழலில், மத நல்லிணக்கத்திற்கும் உலக அமைதிக்கும் பங்காற்ற திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2023, 13:49