உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் ஆயர் பேரவைகளும் கிறிஸ்தவ சபைகளின், மற்றும் பல்வேறு மதங்களின் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கல் செய்திகளை திருப்பீடத்திற்கு அனுப்பிவருகின்றனர்.
டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காலை முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் Joe Biden அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அனைவரையும் மதிப்புடனும் மாண்புடனும் வாழவைக்க அனைத்துலக ஒருமைப்பட்டுணர்வு அவசியம் என்பதை 2008 அமெரிக்க திருத்தூதுப்பயணத்தின்போது திருத்தந்தை பெனெடிக்ட் அவர்கள் வலியுறுத்திக் கூறியதையும், 2011ஆம் ஆண்டு தான் வத்திக்கானில் சந்தித்து உரையாடியதையும் தற்போது நினைவுகூர்வதாகக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் Rishi Sunak வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 2010ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட திருப்பயணம் அந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருந்ததாகவும், உலகின் அனைத்து கத்தோலிக்கர்களோடு தானும் இந்த இழப்பின் துக்கத்தை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உடன்பிறந்த உணர்வுடன் மேலும் நெருக்கமாக வாழும் ஓர் உலகிற்காக உழைத்த திருத்தந்தை பெனடிக்டின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் அரசுத்தலைவர் Macron.
முன்னாள் திருத்தந்தையின் மரணத்தையொட்டி இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ், கானடா பிரதமர் Justin Trudeau, உக்ரைன் அரசுத்தலைவர் Volodymyr Zelensky, இலண்டன் மேயர் Sadiq Khan, இங்கிலாந்து ஆங்கிலிக்கன் தலைவர் பேராயர் Justin Welby, WCC என்னும் உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் உட்பட பல தலைவர்கள் தங்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்