தேடுதல்

ஆயிரக்கணக்கான மக்கள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் உடலுக்கு அஞ்சலி

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் விருப்பத்திற்கிணங்க திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் முதலில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் உடலுக்கு ஏறக்குறைய 65 ஆயிரம் மக்கள் அஞ்சலி செலுத்தி, அவரின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபித்தனர் என்றும் இரண்டாம் நாளாகிய இன்றும் ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனவரி 03, செவ்வாய், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இரண்டாம் நாளில், அஞ்சலி செலுத்திய மக்களின் முதல் நாள் எண்ணிக்கையையும் இறுதிச்சடங்கு நிகழ்வையும் உறுதிசெய்து திருப்பீடம் தகவல் வெளியிட்டுள்ளது.   

சனவரி 05 வியாழன் உள்ளுர் நேரம் காலை 9.30 மணிக்கு, இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடக்க இருக்கும் இறுதிச்சடங்கிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் எனவும், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் விருப்பத்திற்கிணங்க திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் முதலில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித பேதுரு பெருங்கோவில் அடிப்பகுதியில் அதாவது மறைந்த திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள அடிநிலக் கல்லறையில், மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அதாவது அவரின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலுக்குள் முதலில் அடக்கம் செய்யப்பட்டிருந்த அதே இடத்தில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கின்றது.

பார்வையாளர்கள் அஞ்சலி செலுத்தும் நேரம்

திருத்தந்தையின் உடல் வத்திக்கானின் Mater Ecclesiae துறவு இல்லத்தில் இருந்து அரைமணி நேர செபவழிபாட்டுடன் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு எடுத்து வரப்பட்ட நிகழ்வானது, கர்தினால் Mauro Gambetti அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிலையில், புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலிபீடத்தின் முன் சிவப்பு நிற பாரம்பரிய திருப்பலி உடையில் கையில் செபமாலையுடன் திருத்தந்தையின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக சனவரி 02 திங்கள் முதல் சனவரி 04 புதன் வரை உரோம் நகர் உள்ளுர் நேரப்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வைக்கப்பட்டுள்ளது.

பார்வைக்கு வைக்கப்படும் முன்னரே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது திருத்தந்தையின் மேல் மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது எனவும், மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் இறுதிச் சடங்குகள் மற்றும் அதனுடன் கூடிய பிற சடங்குகள் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தின் தாழ்மையுள்ளப் பணியாளர் என்பதற்கேற்ப எளிமையாக நடத்தப்படும் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2023, 13:23