திருத்தந்தை 16ம் பெனடிக்ட்: "ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்
மேரி தெரேசா: வத்திக்கான்
"ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்பதே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்குமுன் இரவில் கூறிய கடைசி வார்த்தைகள் என்று, அவரின் தனிப்பட்ட செயலரான பேராயர் Georg Gänswein என்று கூறியுள்ளார்.
இத்திருத்தந்தையின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான அவரது அன்புக்குரிய இயேசுவைத் தேடியதையே இச்சொற்கள் நினைவுபடுத்துகின்றன என்றும், ஜோசப் இராட்சிங்கர் அதாவது முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அருள்பணித்துவப் பணியை அடையாளப்படுத்துவது இவையே என 2016ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தந்தை பற்றி நினைவுகூர்ந்தார் என்றும் பேராயர் Gänswein அவர்கள் கூறியுள்ளார்.
டிசம்பர் 31 அதிகாலை ஏறக்குறைய மூன்று மணியளவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இவ்விறுதி வார்த்தைகளை, தெளிவாக முணுமுணுத்தபோது அவரைக் கவனித்துக்கொண்டிருந்த தாதியர் கேட்டார் என்றும், அவரது வாழ்வின் இறுதிநேரங்களில் உடன்உழைப்பாளர்களும், உதவியாளர்களும் அவரைப் பராமரித்து வந்தனர் என்றும் பேராயர் Gänswein அவர்கள் தெரிவித்துள்ளார்.
"ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்ற வார்த்தைகளை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியபோது, ஜெர்மன் மொழி தெரியாத ஒரு தாதியர் மட்டுமே அங்கு இருந்தார் என்றும், இச்சொற்களை மெல்லிய குரலில் இத்தாலிய மொழியில் தெளிவாக, விளங்கக்கூடிய முறையில் அவர் முணுமுணுத்தார் என்றும், அந்நேரத்தில் நான் இல்லை என தழுதழுத்த குரலில் தெரிவித்த பேராயர் Gänswein அவர்கள், அதற்குப்பிறகு அத்திருத்தந்தையால் எதுவுமே பேசமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
"ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்ற வார்த்தைகள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன்னைப் படைத்தவரை முகமுகமாய்த் தரிசிக்க ஆண்டுகளாகத் தன்னையே தயாரித்துவந்ததன் இரத்தின சுருக்கமாய் உள்ளன என்றும், 2016ஆம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அத்திருத்தந்தையின் அருள்பணித்துவ வாழ்வின் 65வது ஆண்டு நிறைவின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தந்தையின் இப்பண்பையே கோடிட்டுக் காட்டினார் என்றும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்