திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நம் காலத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் புனிதத்துவ வாழ்விற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்றுக் கூறியுள்ளார் அவரின் நெருங்கிய நண்பர் Dr. Michael Hesemann
முன்னாள் திருத்தந்தையின் மறைவையொட்டி வத்திக்கான் செய்திக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள Dr. Hesemann அவர்கள், அவரின் இறப்புக்குத் துக்கம் கொண்டாடுவதைவிட அவர் நம்மில் ஒருவராக வாழ்ந்தார் என்பதைக் குறித்து இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் நம் காலத்தின் மிகப் பெரிய சிந்தனையாளர் மற்றும் தத்துவஇயலாளர் என்றும், தான் சந்தித்த, மிகவும் இறைபக்தி கொண்ட புனிதமான அருள்பணியாளர்களில் ஒருவர் என்றும் எடுத்துரைத்துள்ள Dr.Hesemann அவர்கள், அவர் ஒரு அன்பான, மனத்தாழ்மைக்கொண்ட வியக்கத்தக்க திருத்தந்தை என்றும், உண்மையில் தனது ஆடுகள் மீது நிறைவான அன்புகொண்டு பராமரிக்கும் ஒரு நல்ல மேய்ப்பர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு குழந்தையின் தூய்மையான இதயத்தையும் பக்தியையும் தன்னகத்தே கொண்டிருந்தார் என்று எடுத்துக்காட்டியுள்ள Dr.Hesemann அவர்கள், விண்ணகம் மிகவும் அழகானது என்றும் அத்தகையதொரு வாழ்வின் முதல் நிலையை அவர் இங்கேயே வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கடவுளின் அன்பையும் பரிவிரக்கத்தையும் பற்றி மட்டும் பேசவில்லை மாறாக அவற்றை தானும் வாழ்வாக்கிக் காட்டியுள்ளார். ஆனால் அன்பும் புரிந்துணர்தலும் எதனோடும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதாக அவர் புரிந்துகொள்ளவில்லை, காரணம் உண்மையைக் காக்கும் பொருட்டு அவர் எதனோடும் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் விளக்கியுள்ளார் Dr.Hesemann
இருள் சூழ்ந்திருந்த காலத்தில் ஞானம் நிரம்பிய, மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய, அனைவருக்கும் செவிசாய்க்கக்கூடிய, ஒரு எளிய மனிதரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் இத்திருஅவை சிறப்பாக வழிநடத்தப்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார் Dr.Hesemann
இப்படிப்பட்ட இறைவனின் தூய பணியாளர் உண்மையில் இப்போது விண்ணகத்தில் இருக்கிறார், மேலும் நமக்காகப் இறைவனிடத்தில் பரிந்துரைப்பவராக இருப்பார் என்றும் கூறியுள்ள Dr.Hesemann, அதேவேளையில், புனித வாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு வழிகாட்டியாகவும், தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் இருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம் என்றும், இன்றைய நெருக்கடியான காலத்தில் திருஅவைக்கு அவருடைய வழிகாட்டுதல் அதிகம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்