தேடுதல்

இரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் இரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் 

உலகில் அமைதி இல்லையென்றால் நாம் எல்லாருமே தோல்வியுற்றவர்கள்

போரினால் காயமுற்ற சிறார், ஆண்கள், பெண்கள் என அனைவரின் அழுகுரலும் இறைத்தந்தையாம் கடவுளுக்கு கெஞ்சும் இறைவேண்டலாக அமைந்துள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உலகில் அமைதி இல்லையென்றால் நாம் எல்லாருமே தோல்வியடைந்தவர்கள் என்று அர்த்தம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைனில் அமைதி என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நூல் ஒன்றுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புகள் அனைத்தையும் தொகுத்து, "உக்ரைனில் அமைதி குறித்த ஒரு திருமடல்" என்ற தலைப்பில் பிரான்செஸ்கோ கிரானா என்பவர் தயாரித்துள்ள நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு அவர் பதிவுசெய்துள்ளார்.  

இந்நூலுக்கு திருத்தந்தை எழுதியுள்ள அணிந்துரையை, Il Fatto Quotidiano என்ற இத்தாலிய நாளிதழ், டிசம்பர் 05, இத்திங்களன்று பிரசுரித்துள்ளது. மேலும், டிசம்பர் 06, இச்செவ்வாய் உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் தலைமையிலான குழு இந்நூலை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு, தான் எழுதியுள்ள அணிந்துரையை பிரசுரித்துள்ள Il Fatto Quotidiano நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, உலகில் அமைதி நிலவாவிடில், நாம் அனைவரும் போரால் தோல்வியுற்றவர்களே என்றுரைத்து அமைதிக்காக அழைப்புவிடுத்துள்ளார்.

கிறிஸ்தவப் பார்வையில் எதிர்நோக்கு

“ஆண்டவர் ஒரு புதுமையை முடிக்காமல் அதைத் தொடங்கியதாக நான் ஒருபோதும் கண்டதில்லை” என Alessandro ManzoniI என்பவர் எழுதிய “நிச்சயதார்த்தம்” என்ற புகழ்பெற்ற இத்தாலிய புதினத்தை பலமுறை வாசித்து அதனை நீண்டகாலம் தியானித்துவந்துள்ளேன் என்று எழுதியுள்ள திருத்தந்தை, நாம் 2025ஆம் யூபிலி ஆண்டை நோக்கியுள்ளவேளை, இச்சிந்தனையின் அடிப்படையில், அவ்வாண்டின் விருதுவாக்கை, எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இறையியல் புண்ணியத்திற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நமக்களித்துள்ள எதிர்நோக்கு குறித்த வியப்பூட்டும் திருமடலில், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் மீட்பு குறித்து எழுதியிருப்பவை, நம்பகத்தன்மைகொண்ட எதிர்நோக்கை வழங்குகின்றன எனவும், அவ்வுணர்வில் இக்கால மனச்சோர்வுகளிலும்கூட நம்மால் அவற்றை ஏற்று வாழ முடிகின்றது எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.  

கிறிஸ்தவர்களாகிய நாம் மனிதர்களைக் குறைவாக நோக்காமல், காணாமல் போனவர்களைப் பரிவோடு தேடிய கிறிஸ்து மீது நம் கண்களைப் பதிக்கவேண்டும், இதுவே திருஅவையின் பார்வையாக எப்போதும் இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை தன் அணிந்துரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர், கடவுளின் பெயரை அவமதிக்கின்றது

பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் உக்ரைனில் போர் தொடங்கி நடந்துவருகின்றது, நீதியான போர், புனிதப் போர் குறித்து இந்நேரத்தில் நம்பிக்கையோடு நம்மால் பேச முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்துவை அறிவிக்கும் இறைமக்களாகிய நாம் நம்பிக்கையின் உண்மை குறித்து கூக்குரல் எழுப்பவேண்டியது நம் கடமை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடவுள், அமைதி, அன்பு மற்றும், எதிர்நோக்கின் கடவுள் என்றும், இறைமகன் கற்றுக்கொடுத்தது போல, அனைவரும் சகோதரர்களாக அவருக்கு நாம் தேவைப்படுகிறோம், அனைத்துப் போர்களும் கடவுளின் மிகவும் புனிதமிக்கப் பெயரை அவமதிக்கின்றன, வார்த்தைகளால் கூறமுடியாத அளவுக்கு இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அவரது பெயரைப் பயன்படுத்தும்போது அவரின் பெயரை மிக அதிகமாக அவமதிக்கின்றோம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

போரினால் அனைவருக்குமே இழப்பு

போரினால் காயமுற்ற சிறார், ஆண்கள், பெண்கள் என அனைவரின் அழுகுரலும் இறைத்தந்தையாம் கடவுளுக்கு கெஞ்சும் இறைவேண்டலாக அமைந்துள்ளது, எந்த ஒரு போரிலும் எவரும் ஈடுபடாதபோதுகூட எத்தனை கடுந்துயரங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம், போர், மரணத்திற்கு இட்டுச்செல்லும் ஒரே பாதையாகும், இதில் தாங்கள் வெற்றியாளர்கள் என்று நினைக்கும் சிலரை அது ஏமாற்றுகிறது, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நாம் அனைவரும் போரால் தோற்கடிக்கப்படுகிறோம், எனவே அமைதியைக் கொணர எல்லாரும் ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2022, 14:17