மாற்றுத்திறனாளிகள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் - திருத்தந்தை
மெரினா ராஜ் -வத்திக்கான்
ஒவ்வொரு நபரின் மாண்பை அங்கீகரிப்பது திருஅவையின் நிலையான பொறுப்பாகும் எனவும், மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தியும், குடும்ப வாழ்வு என்ற தலைப்பில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 03 சனிக்கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் மாற்றுத்திறனாளிகள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்து மகிழ்ந்த திருத்தந்தை அவர்கள், அனைத்து மக்களாலும் மாற்றுத்திறனாளிகள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
ஒவ்வொரு நபரின் மாண்பை அங்கீகரிப்பது திருஅவையின் நிலையான பொறுப்பாகும்: இது ஒவ்வொருவருக்கும், குறிப்பாக மிகவும் பலவீனமான மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நெருக்கத்தை காலப்போக்கில் தொடரும் பணியாகும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், மாற்றுத்திறனாளிகளை வரவேற்றல், அவர்களின் தேவைகளுக்கு பதிலளித்தல் போன்றவை அரசு மற்றும் திருஅவைச் சமூகங்களின் கடமை எனவும், உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உடல், மனம், சமூகம், ஆன்மீகம் எனப் பல்வேறு பரிமாணங்களில் அவர்களின் வாழ்வுத் தேவைகளுக்குப் பதிலளிக்க உழைக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
சொந்தம் மற்றும் இணைந்திருத்தல் என்பவை, வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல் மேய்ப்புப்பணி நடவடிக்கையின் நோக்கமாக மாற வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்கும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரையும் நினைவுகூரவேண்டும், அதிலும் குறிப்பாக, போர்ச் சூழலில் வாழ்பவர்கள், மற்றும் போரினால் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டவர்கள் என அனைவரையும் நினைவுகூரவேண்டும் என்பது திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தியின் கருத்தாகும்.
மாற்றுதிறனாளிகளின் உரிமைகள்
தனது தேவைகளை அல்லது சமூக வாழ்க்கையின் தேவைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செய்ய முடியாதவர் மாற்றுத்திறனாளி, சிலர் பிறப்பிலேயோ அல்லது இடைப்பட்ட வாழ்க்கை சூழலினாலோ இந்நிலைக்கு ஆளாகின்றனர். உடல் அல்லது மனத்திறன் குறைபாடு உடையவர்கள் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுச்சேவைகள் மற்றும் உதவிகளுக்கு உரிமையுடையவர்கள். கல்வியின் அனைத்து நிலைகளிலும் தகுந்த ஆதரவுடன் கல்வி கற்கும் உரிமை, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தரம், தகுந்த வேலைவாய்ப்பைக் கண்டறிவதில் வழிகாட்டுதல் பெறுதல் போன்ற அனைத்திற்கும் உரிமை பெற்றவர்கள்.
கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம்
வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் பொது மக்களுக்கு டிசம்பர் 03 வெள்ளி மாலை 5 மணிக்கு திறந்துவைக்கப்பட உள்ள நிலையில், அதனை திருப்பீடத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ள இத்தாலியின் Sutrio, Rosello, மற்றும் குவாத்தமாலாவின் பிரதிநிதிகளை பிற்பகலில் வத்திக்கானில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.
கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்திருக்கும் மின்விளக்குகள் எரியவிடப்பட்டு கிறிஸ்மஸ் குடில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் வத்திக்கான் நாட்டின் நிர்வாகத்துறையின் தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga அவர்களும், அத்துறையின் பொதுச் செயலர் அருள்சகோதரி Raffaella Petrini அவர்களும், இவையிரண்டையும் நன்கொடையாக வழங்கியுள்ள இத்தாலியின் Sutrio, Rosello, மற்றும் குவாத்தமாலாவின் பிரதிநிதிகளும் பங்கேற்பர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்