உக்ரேனிய போர்க் கைதியின் மனைவி, மகனைச் சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 21, இப்புதனன்று, தான் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு, உக்ரைனின் Azovstal உருக்கு ஆலையின் அழிவைக் காட்டும் நாள்காட்டி உட்பட, திருத்தந்தைக்குப் பரிசுகளைத் கொண்டு வந்த போர்க் கைதியாகிய ஒருவரின் மனைவி மற்றும் மகனை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அந்த நாள்காட்டியில் வெளியாகியிருந்த போர் பற்றிய பயங்கரமான படங்களை, ஒவ்வொன்றாகப் பார்க்க நேரம் எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய இராணுவத்தால் பல மாதங்களாக முற்றுகையிடப்பட்ட உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில், தியாகிகள் நகரமான மாரியுபோலில் மக்களின் அழிவு மற்றும் துயரத்தின் சாட்சியாக அவைகள் அமைந்துள்ளன என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.
அதேவேளையில், மாரியுபோல் நகர மக்களின் அழிவையும் துயரங்களையும் அந்த நாள்காட்டியிலுள்ள படங்கள் ஒருபுறம் எடுத்துக்காட்டினாலும், மறுபுறம் 2023-ஆம் ஆண்டு உக்ரைன் மக்களுக்கு அமைதியை அருளும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தி உள்ளது.
போர்க்கைதிகளின் விடுதலையை எளிதாக்கும் அல்லது குறைந்தபட்சம் தடுப்புக்காவலில் உள்ள அவர்களின் நிலைமையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் அந்தப் போர்கைதியின் மனைவியான Larissa, அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் திருத்தந்தையிடம் கொடுத்தார்.
இலாரிசா மற்றும் அவரது மகன் செர்ஜியுடன் சென்ற திருப்பீடத்திற்கான உக்ரேனிய தூதரின் மனைவி டயானா யுராஷின், கோதுமை தண்டுகளால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள் ஒன்றை திருத்தந்தைக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
மேலும், இப்போது வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் இருக்கும் வயல்களில் சேகரிக்கப்பட்ட கடைசி கோதுமை தண்டுகள் இவை என்று தூதரகத்தின் உதவியாளர் இரினா ஸ்கப் திருத்தந்தையிடம் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்