தேடுதல்

திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில்  

கிறிஸ்மஸின் உண்மையான மாட்சிமை மீண்டும் கண்டுணரப்படவேண்டும்

கிறிஸ்மஸ் குடில்கள், நம் ஒவ்வொருவரோடும் மிக அருகில் இருப்பதற்காக மனிதனான இறை மகனின் பிறப்பு குறித்து நம்மிடம் பேசுகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இரண்டு கிறிஸ்மஸ் குடில்கள், மற்றும், கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்கு வழங்கியுள்ள இத்தாலியின் Sutrio, Rosello ஆகிய சிற்றூர்கள் மற்றும், குவாத்தமாலா நாட்டின் பிரதிநிதிகளை டிசம்பர் 03, இச்சனிக்கிழமையன்று  வத்திக்கானில் சந்தித்து தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலையில் திறக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில், ஒளியேற்றப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம், மற்றும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் ஆகியவற்றை வழங்கிய இப்பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

கடவுளைச் சந்திப்பதற்கு அவர் இருக்கும் இடங்களில் அவரை அடையவேண்டும் என்றும்,  மாட்டுத் தொழுவத்தில் பிறப்பதற்கு இயேசு செய்தது போன்று நம்மைச் சிறியவர்களாக்க நம்மையே நாம் தாழ்த்தவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இப்பிரதிநிதிகளுக்கு, குறிப்பாக, இக்கிறிஸ்மஸ் குடில்களை அமைப்பதிலும், கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்குக் கொண்டுவந்து அழகுபடுத்திய பணியிலும் ஈடுபட்டவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் மரம், மற்றும் கிறிஸ்மஸ் குடில்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

கிறிஸ்மஸ் குடில்கள் கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்கு வழங்கியுள்ளவர்கள்
கிறிஸ்மஸ் குடில்கள் கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்கு வழங்கியுள்ளவர்கள்

மரங்கள் போன்று வேர்கள் நமக்குத் தேவை

மின்விளக்குகளோடு ஒளிரும் கிறிஸ்மஸ் மரம், பல நேரங்களில், பாவம், அச்சம், மற்றும், வேதனையால் நிறைந்துள்ள நம் வாழ்வின் இருளை ஒளிர்விக்க வருகின்ற இயேசுவை நினைவுபடுத்துகிறது எனவும், வாழ்வில் உறுதியாய் இருந்து வளரவும் அவ்வாழ்வில் வீசும் புயல்களை எதிர்த்துநிற்கவும் மரங்கள் போன்று வேர்கள் நமக்குத் தேவை எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எனவே, வாழ்விலும், கிறிஸ்தவ நம்பிக்கையிலும் உறுதியாக இருப்பதற்கு வேர்களைப் பேணி வளர்ப்பது முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்மஸ் குடில்களின் முக்கியத்துவம் குறித்த தன் சிந்தனைகளையும் எடுத்துரைத்துள்ளார்.

இயேசுவின் தாழ்மை

கிறிஸ்மஸ் குடில்கள், நம் ஒவ்வொருவரோடும் மிக அருகில் இருப்பதற்காக மனிதனான இறைமகனின் பிறப்பு குறித்து நம்மிடம் பேசுகின்றன என்றும், இயல்பான ஏழ்மையில் இயேசு பிறந்த இடம், நுகர்வு கலாச்சாரம், மற்றும் வர்த்தகப் போக்கிலிருந்து ஒரு மாறுபட்ட கிறிஸ்மஸாக, அதன் உண்மையான மாட்சிமையை மீண்டும் கண்டுணர நமக்கு உதவுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

கிறிஸ்மஸ் குடில், கந்தைத் துணிகளால் பொதியப்பட்டுள்ள புதிதாகப் பிறந்துள்ள கடவுளின் வலுவற்ற எளிமையோடு, அவரது தாழ்மையோடு, அவரின் கனிவுள்ள பாசத்தோடு மிக நெருக்கமுள்ளவர்களாக மாறுவதற்கு நமக்கு உதவுகிறது என்றும் திருத்தந்தை உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2022, 20:18