திருத்தந்தை: வீட்டு வன்முறை சுதந்திரத்தைக் கொலைசெய்கிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடிலை டிசம்பர் 07, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் வாகனத்தில் வந்து பார்வையிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எதிர்பாராத நேரத்தில் அவ்வளாகத்திற்கு வந்த திருத்தந்தையைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்படைந்துள்ளதோடு அவரை வாழ்த்தி ஆசிரும் பெற்றுள்ளனர்.
டுவிட்டர் செய்தி
இன்னும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை அளவற்ற விதமாய் அன்புகூரும் இப்பிரபஞ்சத்தின் ஆண்டவரில் நம் நம்பிக்கையை வைப்போம் என்று கூறியுள்ளார்.
நாம் ஏதாவது வியப்புக்குரியனவற்றைக் கட்டியெழுப்புவோம் என்பதை அவர் அறிந்திருப்பவர் என்றும், புனிதர்களின் வாழ்வு இதனை மிக அழகான வழியில் நமக்குக் காட்டுகிறது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.
நாம் அடிக்கடி தினத்தாள்களில் வாசிக்கின்ற வீடுகளில் இடம்பெறும் பல வன்முறைகள், மற்றவரை தனக்கென வைத்துக்கொள்ளும் நிலையிலிருந்து உருவாகின்றன என்றும், தனக்கு மட்டுமே உரிமைகொண்டாடுவது, நன்மையின் எதிரி மற்றும், பாசத்தைக் கொலைசெய்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
வீடுகளில் இடம்பெறும் வன்முறை, சுதந்திரத்தைக் கொலைசெய்கிறது, மற்றும், வாழ்வைத் திணறடித்து, அதனை நரகமாக்குகின்றது எனவும் திருத்தந்தை இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கூறியுள்ளார்.
Roberto Benigni
இன்னும், இத்தாலிய நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளைக்கொண்ட Roberto Benigni அவர்களையும் இப்புதன் காலையில் சந்தித்து உரையாடியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Roberto Benigni அவர்கள், "La vita è bella" அதாவது வாழ்வு அழகானது என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதைப் பெற்றவர் ஆவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்