தேடுதல்

 குவாதலூப்பே அன்னை மரியாவிடம் திருத்தந்தை செபிக்கிறார் குவாதலூப்பே அன்னை மரியாவிடம் திருத்தந்தை செபிக்கிறார் 

டிசம்பர் 12: வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி

1531ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிலுள்ள குவாதலூப்பேயில் புனித ஹூவான் தியோகோ அவர்களுக்கு அன்னை மரியா காட்சியளித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நம் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் இறைவார்த்தை ஏற்படுத்தும் நல்தாக்கத்தை டிசம்பர் 05, இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தி வழியாகத் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

நம் வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் உள்ளூர ஊடுருவியுள்ள இறைவார்த்தை, நம் சகோதரர் சகோதரிகளின் துன்பங்கள், ஏழைகளின் அழுகுரல், சமுதாயத்தையும் இப்பூமிக்கோளத்தையும் காயப்படுத்துகின்ற வன்முறை, மற்றும், அநீதி ஆகியவற்றுக்குச் செவிமடுக்கச் செய்கிறது என்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

இவ்வாறு செவிமடுப்பதன் வழியாக, நாம் அவற்றைப் புறக்கணிக்கின்ற கிறிஸ்தவர்களாக இல்லாமல், செயல்திறன், படைப்பாற்றல் மற்றும், இறைவாக்குப் பண்புள்ளவர்களாக வாழவும் இறைவார்த்தை உதவுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், திருப்பீட சீர்திருத்தப் பணியில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சி-9 கர்தினால் அவைக் கூட்டம், இத்திங்களன்று தொடங்கியுள்ளது.

டிசம்பர் 12ல் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி

அமெரிக்காவின் பேரரசியும், பிலிப்பீன்ஸ் நாட்டின் பாதுகாவலருமான குவாதலூப்பே அன்னை மரியா விழாவை முன்னிட்டு, டிசம்பர் 12, வருகிற திங்கள் மாலை ஆறு மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார் என்று, இலத்தீன் அமெரிக்க பாப்பிறை அமைப்பு அறிவித்துள்ளது.

குவாதலூப்பேயில் அன்னை மரியா காட்சியளித்து ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் வாழ்கின்ற கத்தோலிக்கர், அக்கண்டத்தில் இயேசு கிறிஸ்துவின் இருத்தலின் அர்த்தம் குறித்து அன்னை மரியா வழியாக ஆழ்ந்து சிந்திக்குமாறு அவ்வமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.  

நற்செய்தி அறிவிப்புப்பணியில் பண்பாட்டுமயமாக்கல் என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டை அவ்வன்னை நமக்கு விட்டுச்சென்றுள்ளார் என்றும், அமெரிக்க கண்டத்திலுள்ள ஒவ்வொரு நாடும் தனக்கு முன்வைக்கப்படும் சவாலை எதிர்கொள்ள அவ்வன்னையின் பரிந்துரையை இறைஞ்சவேண்டும் என்றும் அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2022, 14:11