திருத்தந்தை: செபிக்கும் முறை பற்றி கன்னி மரியாவிடம் கேட்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகின் மீட்பராம் இயேசுவைப் பெற்றெடுக்கக் காத்திருக்கும் கன்னி மரியாவிடம் காத்திருப்பு மற்றும், இறைவேண்டலின் செய்முறையைக் கற்றுத்தருமாறு வேண்டுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 23, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
திருவருகைக் காலம் (#Advent) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தம் திருமகனைப் பின்பற்றுவதில் கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதற்காக, அவரைப் பெற்றெடுக்க அன்போடு காத்திருக்கும் அவ்வன்னையிடம், காத்திருப்பது மற்றும் செபிப்பது எவ்வாறு என்பதை நமக்குக் கற்றுத்தருமாறு கேட்போம் என்று பதிவுசெய்துள்ளார்.
நம் தினசரி வாழ்வின் நிகழ்வுகளில் இறைமகனின் மீட்பளிக்கும் இருத்தலைக் கண்டுணரும்வண்ணமும், இனிமையோடு காத்திருக்கும் கன்னி மரியாவிடம் அவ்வாறு வேண்டுவோம் என்றும், தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், டிசம்பர் 23, இவ்வெள்ளி காலையில் சமூகத்தொடர்பு திருப்பீடத் துறையின் தலைவர் பவுலோ ரூஃபினி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
கிறிஸ்மஸ் திருவிழிப்பு திருப்பலி
டிசம்பர் 24, சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 7.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கிறிஸ்மஸ் திருவிழிப்பு திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 25, பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்தில், ஊருக்கும் உலகுக்கும் வழங்கும் ஊர்பி எத் ஓர்பி செய்தி மற்றும், ஆசிரை வழங்குவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்