தேடுதல்

கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சிக் குழுவினர் சந்திப்பு கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சிக் குழுவினர் சந்திப்பு 

திருத்தந்தை: இசை அமைதிக்கு வழியமைக்க அழைப்புவிடுக்கிறது

இசை என்ற சிறந்த கொடையைக் கொண்டிருக்கும் கலைஞர்கள், புதிய திருக்காட்சிகளின் அழகை உலகுக்குக் கொடையாக வழங்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களை ஏற்கின்ற அமைதிக்கு, கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சியை அர்ப்பணித்திருக்கும் கலைஞர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சியை நடத்துகின்ற 120 கலைஞர்களை, கிளமெந்தினா அறையில், டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கலைஞர்கள், தங்களின் பாடல்கள் வழியாக, அன்பு மற்றும் வாழ்வின் செய்தியும், உடன்பிறந்த உணர்வும் பரவுவதற்கு உதவி, பல மனித இதயங்களைத் தொடுகின்றனர் என்று அவர்களைப் பாராட்டினார்.

நாம் அறிந்திருப்பதுபோன்று, ஒவ்வொரு நாளும் கட்டியெழுப்பப்படவேண்டியது அமைதி என்றும், இது நம் தினசரி வாழ்வையும் செயல்களையும் தூண்டவேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, இன்றைய இசை நிகழ்ச்சியோடு தொடர்புடைய பிறரன்புத் திட்டங்களில் பங்குகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் என்பது நினைவுபடுத்தப்படும்வேளை, இக்காலக்கட்டத்தில் அமைதி அவசரத்தேவையாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.  

உக்ரைனில் புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பும் உணவும் மருந்துகளும் வழங்கிவரும் சலேசிய சபையினருக்கு நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து, அமைதியின் கைவினைஞர்களாக இருக்குமாறு இசைக் கலைஞர்களை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சிக் குழுவினர் சந்திப்பு
கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சிக் குழுவினர் சந்திப்பு

வேதனை, மற்றும், ஆன்மிக வறட்சிச் சூழல்களில்கூட கடவுள் வரலாற்றில் இவ்வாறே செயல்படுகிறார் என்றும், அவர் நம் திறமைகளைப் பயன்படுத்தி நம் சமகால மனிதருக்கு மீட்பைக்கொணர விரும்புகிறார் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இசை என்ற சிறந்த கொடையைக் கொண்டிருக்கும் இக்கலைஞர்கள், புதிய திருக்காட்சிகளின் அழகை உலகுக்குக் கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதயத்திற்கு இதமாக உள்ள இசை, உரையாடலை நமக்குத் திறக்கின்றது, சந்திப்பு மற்றும், நட்புறவைப் பேணி வளர்க்கின்றது, இவ்வாறு இசை அமைதிக்கு வழியமைக்க நமக்கு அழைப்புவிடுக்கிறது என்றுரைத்து தன் ஆசிரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2022, 15:47