கிறிஸ்து பிறப்பு கடவுளின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 24, இச்சனிக்கிழமை இரவு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று வழி நடத்திய கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரை.
‘பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்’ (லூக் 2:7), ‘குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்’ (வச.12), ‘விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்’ (வச.16) என்ற இறைவார்த்தைகளில் மூன்று முறை ‘தீவனத் தொட்டி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்கின்றோம்.
கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான அர்த்தத்தைக் காண நாம் தீவனத் தொட்டியை உற்றுநோக்குவோம். ஏனெனில், கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதை அது நமக்கு விளக்கிச் சொல்கிறது. இதன் அடிப்படையில் தீவனத் தொட்டி வெளிப்படுத்தும் மூன்று காரியங்கள் குறித்து உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
கடவுளின் நெருக்கம்
முதலாவதாக, தீவனத் தொட்டி வெளிப்படுத்துவது கடவுளின் ‘நெருக்கம்’ (closeness). தீவனத் தொட்டியானது உணவை விரைவாக உட்கொள்ள உதவும் ஒரு அடையாளமாக அமைகிறது. இது மனித மாண்பை சிதைக்கும் நுகர்வுக்கான நமது பேராசையை அடையாளப்படுத்துகிறது. இந்தப் பேராசை என்பது போரின் வழியாக வெளிப்படுகிறது. நாம் எத்தனைப் போர்களைக் இதுவரைக் கண்டிருக்கின்றோம். இன்றும் போர்கள் வழியாக எத்தனை இடங்களில் மனித மாண்பும் சுதந்திரமும் சிதைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தப் போர்கள் உருவாக்கிய வறுமையும் அநீதியும் குழந்தைகளின் வாழ்வை அதிகம் பாதித்திருக்கின்றன.
தீவனத் தொட்டியில் பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. அவர் நமது உணவாக வேண்டும் என்பதற்காக அதில் தன்னை வெளிப்டுத்துகிறார். அவர் நம் இதயங்களைத் தொடவும், வரலாற்றின் போக்கை மாற்றும் வலிமை அன்புக்கு மட்டுமே உள்ளது என்பதை நமக்குச் சொல்லவுமே அதில் பிறந்துள்ளார். அவர் நமைவிட்டுத் தூரப் போய்விடாமல் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை நிலையில் தன்னை ஒரு தீவனத் தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம் கொண்டார்.
கடவுளின் ஏழ்மை
இரண்டாவதாகத், தீவனத் தொட்டி வெளிப்படுத்தும் முக்கியமான கருத்து கடவுளின் ‘ஏழ்மை’ (poverty). குழந்தை இயேசு தீவனத் தொட்டியைச் சுற்றிலுமிருந்த நபர்களின் அன்பால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்டார். ஏனென்றால், தீவனத் தொட்டியைச் சுற்றியிருந்த அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் மற்றும் அனைத்து ஏழையரும், செல்வம் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளால் அல்ல, மாறாக, அன்பால் மட்டுமே அங்கு ஒன்றுபட்டிருந்தனர். ஆகவே, பணத்திலும் அதிகாரத்திலும் அல்ல, ஆனால், உறவுகளிலும் நபர்களிலும்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள் காணப்படுகின்றன என்பதைத் தீவனத் தொட்டியின் ஏழ்மை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவே உண்மையான செல்வமாக விளங்குகிறார். ஆகவே, தீவனத் தொட்டியில் தன்னை உண்மைச் செல்வமாக வெளிப்படுத்தும் இந்த இயேசுவைச் சந்திக்கத் தேடுகிறோமா என்ற கேள்வியை எழுப்புவோம். மேலும் ஏழ்மை நிலையில் தன்னை ஒரு ஏழையாக வெளிப்படுத்தியுள்ள இயேசுவை வணங்கி ஏழையருக்குப் பணியாற்றும் திருஅவையாக வாழ்வதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்பதையும் இத்தருணத்தில் உணர்ந்துகொள்வோம்.
நிச்சயமாக, இந்த உலகம் தரும் வசதி வாய்ப்புகளை விட்டொழித்துவிட்டு தீவனத் தொட்டிக் காட்டும் ஏழ்மையை அரவணைத்துக் கொள்வது உண்மையிலேயே சவால் நிறைந்த ஒன்றுதான். இருந்தபோதிலும், ஏழையரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாம் உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட முடியாது. ஆகவே, ஏழ்மை நிலையில் பிறந்துள்ள கிறிஸ்து இயேசுவில் நமது பிறரன்பு பணிகள் மீண்டும் பிறக்கட்டும்!
கடவுளின் உறுதித்தன்மை
மூன்றாவதாக, தீவனத்தொட்டி வெளிப்படுத்துவது கடவுளின் ‘உறுதித்தன்மை’ (concreteness). கடவுள் உண்மையிலேயே நமக்காக மனுவுருவானார் என்பதை இப்பண்பு நமக்கு எடுத்துரைக்கிறது. இயேசு ஏழையாக பிறந்தார், ஏழையாக வாழ்ந்து ஏழையாகவே இறந்தார்; அவர் ஏழ்மையைப் பற்று பற்றி அதிகம் பேசவில்லை, ஆனால், நமக்காக அதனை இறுதிவரை வாழ்ந்து காட்டினார். தீவனத் தொட்டி முதல் சிலுவை வரை அவர் நம்மீது தெளிவான மற்றும் உறுதியான அன்பு கொண்டிருந்தார்.
பிறப்பு முதல் இறப்பு வரை, தச்சரின் மகனான இயேசுக் கிறிஸ்து, நாம் மீட்புப்பெற வேண்டும் என்பதற்காக, சிலுவை மரம் கொடுத்த அத்தனைத் துயரங்களின் வேதனைகளையும் தாங்கிக்கொண்டார். அவர் நம்மை வெறும் வார்த்தைகளால் மட்டும் நேசிக்கவில்லை, மாறாக, அவ்வார்த்தைகளை வாழ்வாக்கிக் காட்டினார். ஆகவே, வெற்று வார்த்தைகளாலும் மேலோட்டமான செயல்பாடுகளாலும் மட்டுமல்ல, மாறாக, இறைவழிபாட்டிலும், பிறரன்புப் பணிகளிலும் நாம் நமது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
தீவனத் தொட்டியிலும் சிலுவையிலும் தனது ஒன்றுமில்லாத்தன்மை வழியாக ஏழ்மையை வெளிப்படுத்திய இயேசுக் கிறிஸ்து, நமது சாக்குப் போக்குகள், நியாயப்படுத்தல்கள் மற்றும் வெளிவேடங்கள், அனைத்தையும் தீவனத் தொட்டியின் கீழ் விட்டுவிட்டு, நமது செயல்பாடுகளின் உண்மைத்தன்மைக்குள் செல்லுமாறு நம்மைத் தூண்டுகிறார்.
குழந்தை இயேசு, தனது தாய் அன்னை மரியாவால் மெல்லியத் துணிகளால் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டதை போல, நாமும் அன்பு என்னும் துணியால் சுற்றப்படவேண்டுமென வேண்டுகிறார். ஆகவே, நம்பிக்கையை இழந்து வாழும் அனைவரும் மீண்டும் புதிதாய்ப் பிறக்க, குழந்தை இயேசுவின் பெயரால் அவர்களுக்குச் சிறிதளவாவது நம்பிக்கையைக் கொடுப்போம்.
இயேசுவே நீர் தீவனத் தொட்டியில் கிடப்பதைக் காண்கிறோம். நாங்கள் உம்மை எப்பொழுதும் எங்கள் பக்கத்தில் மிகவும் நெருக்கமாகப் பார்க்கிறோம். நன்றி ஆண்டவரே! உண்மையான செல்வம் மனிதர்களிடத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஏழைகளிடத்திலுமே இருக்கின்றது என்பதை எங்களுக்குக் கற்றுகொடுப்பதற்காகவே, நீர் ஏழ்மை நிலையில் பிறந்துள்ளதைக் காண்கின்றோம். இதனை உணர்ந்து நாங்கள் உமக்குப் பணியாற்றத் தவறியிருந்தால் எங்களை மன்னியும். நாங்கள் உம்மை உறுதித்தன்மைக் கொண்டவராகப் பார்க்கிறோம், ஏனென்றால், எங்கள் மீதான உமது அன்பு உறுதியானது. எங்களின் நம்பிக்கை உயிரோட்டம் பெற எங்களுக்கு உதவியருளும்- ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்