தேடுதல்

திருத்தந்தை, சுலோவாக்கியா அரசுத்தலைவர் Caputova சந்திப்பு திருத்தந்தை, சுலோவாக்கியா அரசுத்தலைவர் Caputova சந்திப்பு 

திருத்தந்தை, சுலோவாக்கியா அரசுத்தலைவர் Caputova சந்திப்பு

இஸ்லாமிய உலகின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Salim Mohammed AlMalik அவர்கள், டிசம்பர் 10, இச்சனிக்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

சுலோவாக்கியா நாட்டின் அரசுத்தலைவர் Zuzana Caputova அவர்களையும், இஸ்லாமிய உலகின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Salim Mohammed AlMalik அவர்களையும், டிசம்பர் 10, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையைச் சந்தித்தபின்னர் பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத் துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களைச் சந்தித்துப் பேசினார், சுலோவாக்கியா அரசுத்தலைவர் Caputova.

திருப்பீடத்திற்கும் சுலோவாக்கியா நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் தலத்திருஅவையின் பணிகள், உக்ரைனில் இடம்பெறும் போர், அது அந்நாட்டுப் பகுதியிலும் உலகளவிலும் உருவாக்கியுள்ள பாதிப்புக்கள், புலம்பெயர்ந்தோரை ஏற்பது, மனிதாபிமானப் பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

உலக மனித உரிமைகள் நாள் – டிவிட்டர் செய்தி

மேலும், டிசம்பர் 10, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாளை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில், மனித உரிமைகள், மனித உரிமைகள் நாள், எழுந்துநில் ஆகிய ஹாஷ்டாக்குகளுடன் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நலிந்தோரின் உரிமைகளை உறுதிசெய்வதன் வழியாக அவர்களின் மனித மாண்பைக் காப்பது, மனித உடன்பிறந்த உணர்வுநிலை வளரவும், ஒவ்வொரு மனிதரிலும் பொறிக்கப்பட்டுள்ள கடவுளின் சாயல் பாதுகாக்கப்படவும் உதவுகின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2022, 14:31