போரின் துயரத்தை குழந்தைகள் சுமக்கிறார்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
உக்ரேனிய குழந்தைகள் போர் ஏற்படுத்தியுள்ள துயரத்தின் பாரத்தைச் சுமக்கின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
டிசம்பர் 21, இப்புதனன்று, தான் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குழந்தை புன்னகைக்கும் திறனை இழந்தால் அது ஆபத்தானது என்றும், இந்தப் போரினால் அதிகம் அதிகம் துன்புறுவது குழந்தைகள்தாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
கடவுள் குழந்தையாக மனுவுரு எடுக்கும் இத்தருணத்தில், உக்ரேனிய குழந்தைகளைப் பற்றி சிந்திப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதாபிமானமற்ற, மிகவும் கடுமையான போரின் துயரங்களை அவர்கள் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவில் உக்ரேனிய மக்களைப் பற்றி சிந்திப்போம் என்றும், அவர்கள் இந்தக் கடுங்குளிரில் உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ அவர்கள், இறைவன் அவர்களுக்கு விரைவில் அமைதியான வாழ்வை அருளும்படி இறைவேண்டல் செய்வோம் என்றும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்
போலந்து திருப்பயணிகளுடன் சந்திப்பு
அதனைத் தொடர்ந்து போலந்து நாட்டின் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் கடைபிடிக்கும் ஒரு தேசிய பாரம்பரியத்தை நினைவு கூர்ந்தார். அதன்படி, கிறிஸ்துமஸ் தினத்தன்று அக்குடும்பங்கள் எதிர்பாராத விருந்தினருக்காக ஒரு காலியான இடத்தை விட்டுச் செல்கின்றன என்றும், இவ்வாண்டு அவ்விடங்களை உக்ரேனிய புலம்பெயர்ந்தோரால் ஆக்ரமித்துக்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்