நோய் தடையாக இருக்கையில் பணிஓய்வுக்கு ஏற்கனவே கையெழுத்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஆற்றுவதற்கு, தனது உடல்நலம் தொடர்ந்து கடுமையான தடையாக இருக்கும்பட்சத்தில், அப்பணியிலிருந்து விலகிக்கொள்வேன் என்று கையெழுத்திட்ட கடிதத்தை, தான் அப்பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டபோதே கர்தினால் ஒருவரிடம் கொடுத்துவிட்டேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பானிய. தினத்தாள் ஒன்றிடம் அறிவித்துள்ளார்.
ABC என்ற புகழ்பெற்ற இஸ்பானிய தேசிய தினத்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், நலவாழ்வுப் பிரச்சனைகள் அல்லது ஒரு விபத்தால் திருத்தந்தை திடீரென மாற்றுத்திறனாளியாக ஆகிவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
2013ஆம் ஆண்டில் தனது தலைமைத்துவப் பணியைத் தொடங்கியக் காலக்கட்டத்திலேயே அப்போதைய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களிடம், தனது பணி விலகல் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டேன் என்றும், அதனை அவர் யாரிடம் கொடுத்தார் எனத் தெரியவில்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
2006ஆம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் திருப்பீடச் செயலராக நியமிக்கப்பட்ட கர்தினால் பெர்த்தோனே அவர்கள், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை அப்பணியில் இருந்தார் என்பதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
உரோம் ஆயர், மற்றும், கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பர் என்ற தலைமைப் பணியை ஆற்றுவதற்கு உடல்நலம் தடையாக இருக்கையில் அப்பணியிலிருந்து விலகிக்கொள்வேன் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்த அக்கடிதம் குறித்து வெளியிடவேண்டும் என விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அதனால்தான் அது குறித்துச் சொல்கிறேன் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1965ஆம் ஆண்டில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களும் அவரது தலைமைப்பணிக் காலத்தில், இதே மாதிரியான பணி விலகல் கடிதத்தைக் கொடுத்தார் என்பதையும் திருத்தந்தை இப்பேட்டியின்போது நினைவுகூர்ந்தார்.
யாராவது ஒருவர் கர்தினால் பெர்த்தோனே அவர்களிடம் சென்று, தங்களின் அக்கடிதத்தைக் கொடுக்குமாறு கேட்டால், அவர் ஒருவேளை புதிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களிடம் கொடுத்திருப்பார் என்று புன்னகைத்துக்கொண்டே கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது பணிவிலகல் கடிதம், உக்ரைன் போர், வத்திக்கானின் தூதரகப்பணி, திருஅவையில் சிறார் எதிர்கொள்ளும் உரிமைமீறல்கள், பெண்களின் பங்கு, புதியதொரு திருத்தந்தையைத் தேர்வுசெய்யும் வருங்கால கான்கிளேவ் அவைகள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஜெர்மன் திருஅவை, Marseillesல் நடைபெறவிருக்கும் மத்தியகிழக்கு சந்திப்பில் கலந்துகொள்வது, Opus Dei குறித்த Motu Proprio என பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ABC இஸ்பானியத் தினத்தாளுக்கு அளித்த பேட்டி டிசம்பர் 18, இஞ்ஞாயிறு காலையில் வெளியிடப்பட்டது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களோடு உள்ள உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் ஒரு புனிதர் மற்றும், மிகப்பெரும் ஆன்மிக வாழ்வின் மனிதர் என்றும், அவரை அடிக்கடி சந்திப்பதாகவும், அவரின் வெளிப்படையான பார்வையால் உந்துதல் பெறுகிறேன் எனவும் கூறியுள்ளார். அவர் நல்ல நகைச்சுவையுள்ளவர், தெளிவாக இருக்கிறார், மெதுவாகப் பேசுகிறார், ஆனால் உரையாடல்களுக்குக் கவனமுடன் செவிமடுக்கிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்