மற்றவர்களுடன் பணியாற்றுவது என்பது இறைவனின் கொடை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பல்வேறு இடங்களுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, தன்னைக் கவர்ந்தவைகளுள், தன்னார்வலர்களின் சேவை மிகவும் குறிப்பிடும்படியானது, என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக தன்னார்வலர் தினம் டிசம்பர் மாதம் 5ம் தேதி இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயர், அருள்பணியாளர், அருள்கன்னியர், பொதுநிலையினர் என பலர் இருப்பினும், தன்னார்வலர்களின் சேவை குறிப்பிடும்படியானது என பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
மற்றவர்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல, தங்கள் விருப்பங்களை விட்டுக்கொடுத்து சேவையாற்றும் இவர்களின் தன்னார்வப்பணி என்பது, மற்றவர்களை முன்னேற்றுவதில் தன் நிலயான இருப்பைக் கொண்டுள்ளது என மேலும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நோயுற்றோரோடு பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பான விதத்தில் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை, தராளமனதுடன் முன்வந்து பணியாற்றுவது என்பது இறைவனின் கொடை, அதனை மனவுறுதியுடன் ஏற்போம் என அனைவரையும் விண்ணப்பித்துள்ளார்.
திருஅவையின் பலமாக இருக்கும் இப்பணியாளர்களின் தாராளமனப்பான்மைக்காக அவர்களுக்கு நான் நன்றியுரைக்கிறேன் என தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக தன்னார்வலர் நாள் இவ்வாண்டு, தன்னார்வப் பணிகள் வழியாக ஒருமைப்பாடு என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 100 கோடி தன்னார்வலர்கள் இருப்பதாகவும், இதில் அமெரிக்க ஐக்கிய நாடு முன்னணியில் இருப்பதாகவும், அதிலும் ஆண்களைவிட பெண்களின் பங்களிப்பு அதிகம் எனவும் ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்