திருத்தந்தை, சுலோவேனியா நாட்டு பிரதமர் Golob சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று தனது 86வது பிறந்த நாளைக் கொண்டாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உலகின் திருஅவைத் தலைவர்கள், நாடுகளின் தலைவர்கள் என பலர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், இச்சனிக்கிழமையன்று சுலோவேனியா நாட்டு பிரதமர் Robert Golob அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், சுலோவேனியப் பிரதமர் Golob அவர்கள், சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.
திருப்பீடத்துக்கும் சுலோவேனியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு, ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்தல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும் அத்தொடர்பகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்