திருத்தந்தை: உக்ரைனில் இன்று வரலாறு திரும்புகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள், இன்று உக்ரைனில் மீண்டும் அச்சுறுத்தி வருகின்றன என்றும், அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக அமல அன்னையிடம் வேண்டுவோம் என்றும், டிசம்பர் 07, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 08, இவ்வியாழனன்று அமல அன்னையின் பெருவிழாவை நாம் சிறப்பிக்கும்வேளை, போரின் கொடுமைகளால் துயருறும் எல்லாருக்கும், குறிப்பாக, உக்ரைனில் துன்புறும் மக்களுக்கும் இறைவனின் அன்னையாகிய மரியா ஆறுதலளிக்குமாறு செபிப்போம் என, பொது மறைக்கல்வியுரையில் பங்குபெற்ற அனைவரிடமும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் காலையில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆற்றிய பொது மறைக்கல்வியுரையில் போலந்து திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மீண்டும் கொடுந்துயரங்களை ஏற்படுத்தி வருகின்றது எனவும், இன்று வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, "Operation Reinhardt" எனப்படும் போலந்து நாட்டு யூதர்களை அழிக்கும் நடவடிக்கை நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்த நிகழ்வு, டிசம்பர் 5, இத்திங்களன்று அந்நாட்டின் Lublin கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள், இன்று உக்ரைனில் மீண்டும் அச்சுறுத்தி வருகின்றன என்று கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள்
1942 மற்றும், 1943ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியின் நாத்சிகளால் நடத்தப்பட்ட போலந்து யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையில், Belzec, Sobibor, மற்றும் Treblinka ஆகிய யூதஇன ஒழிப்பு முகாம்களிலும், அதோடு தொடர்புடைய நடவடிக்கையில் மக்கள் மொத்தமாக சுடப்பட்டதிலும் ஏறத்தாழ 17 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
Reinhard முகாம்கள் படுகொலை நடவடிக்கைகளில், போலந்து மக்கள், ரோமா இனத்தவர் மற்றும் போர்க் கைதிகள் என எண்ணிக்கையற்ற மக்கள் மேலும் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்