மறைக்கல்வியுரை: ஒரு நல்ல சீடர் எப்போதும் விழிப்புடன் இருப்பார்
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, உரோம் நகரில் கடந்த சில நாள்களாக மழைபெய்து வருவதால் டிசம்பர் 14, இப்புதன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது வழக்கமான பொது மறைக்கல்வியுரையை வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் வழங்கினார். அந்த அரங்கத்தை நிறைத்திருந்த பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தெளிந்துதேர்தல் குறித்த தனது 12வது மறைக்கல்விப் பகுதியை முதலில் இத்தாலியத்தில் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குமுன்பு, மத்தேயு நற்செய்தி இயல் 12, 43 முதல் 45 வரையுள்ள இறைவசனங்களும் வாசிக்கப்பட்டன.
இயேசு சொல்கிறார்: “ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும்...” (மத்.12,43-45).
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே காலை வணக்கம். தெளிந்துதேர்தல் குறித்த நம் மறைக்கல்வியில், இன்று இறுதிப் பகுதிக்குள் நுழைகிறோம். புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் முன்மாதிரிகையிலிருந்து தொடங்கி, இறைவேண்டல், தன்னறிவு, ஆன்மிக வறட்சி, ஆன்மிக ஆறுதல், நாம் எடுக்கும் தீர்மானங்கள் சரியானவையே என்பதை உறுதிசெய்யும் அடையாளங்கள் என தெளிந்துதேர்தலின் பல்வேறு கூறுகள் பற்றித் சிந்தித்தோம். எனினும் தெளிந்துதேர்வு செய்கின்ற படிமுறை முழுவதையும் வழிநடத்தவேண்டிய ஓர் அடிப்படையான மனநிலை விழிப்புடன் இருத்தலாகும். இயேசு பல நேரங்களில் தம் சீடர்கள் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து எச்சரிக்கை விடுக்கிறார். அவ்வாறு இல்லையென்றால் பகைவன் நம் கவனச்சிதைவை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொள்வான், மற்றும், நமது நல்ல முயற்சிகளை பூஜ்யமாக்கிவிடுவான். இதற்கு நம் ஆண்டவர் ஒரு தீய ஆவியின் செயல்பாட்டை நமக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். அந்தத் தீய ஆவி, ஒரு வீட்டை விட்டு விரட்டப்பட்டு பின்னர், அந்த வீடு அழகுபடுத்தப்பட்டு ஆனால் காலியாக இருப்பதையும், அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு இல்லாமல் இருப்பதையும் பார்த்து, தனது ஏழு தோழர்களோடு மீண்டும் அவ்வீட்டுக்குள் வருகிறது என்று இயேசு கூறுகிறார். அந்த வீட்டு உரிமையாளர் போன்று நாமும் நம் வீட்டைப் பாதுகாக்கத் தவறலாம். மற்றும், ஆண்டவர் குடியிருக்கும் இடமாக நம் இதயங்களைத் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளலாம். ஆண்டவரின் அருளில் நம்பிக்கை வைக்காமல், நம்மில் மிக அதிகமாக நம்பிக்கை வைக்கும்போது, நமது நடத்தையானது தீய ஆவிக்குக் கதவைத் திறந்துவிடும் மற்றும், அது முன்னைய நிலைமையைவிட கேடுள்ள நிலைமையில் நம்மைக் காணவைக்கும் (காண்க.லூக்.12:45). ஒரு நல்ல சீடர், எப்போதும் விழிப்புடன் இருப்பார், அவர் தூக்கமயக்கத்தில் இருக்கமாட்டார், தனது கடமையைச் செய்வதற்கு எப்போதும் தயாராகவும், விழிப்புடனும் இருப்பார். தெளிந்துதேர்வு செய்யும் நம் நடைமுறையில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் விழிப்புடன் இருத்தல், ஞானத்தின் அடையாளம். அது எல்லாவற்றுக்கும் மேலாக, தாழ்ச்சியின் அடையாளம். அதுவே கிறிஸ்தவ வாழ்வின் உயர்ந்த பாதையாகும்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் நாம் எப்போதும் விழிப்புடன் இருத்தலின் அவசியத்தை வலியுறுத்திக்கூறினார். பொதுவாக எல்லா மறைக்கல்வியுரைகளிலும் கூறுவதுபோன்று இப்புதனன்றும் இளையோர், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், புதுமணத் தம்பதியரைச் சிறப்பாக நினைவுகூர்கிறேன் என்று கூறியத் திருத்தந்தை, போலந்து காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுவரும், குடும்பத்திற்கு குடும்பம் என்ற திருவருகைக் கால நடவடிக்கை குறித்து குறிப்பிட்டார். உலகில் போர்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும், மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வோருக்கு உதவுவதற்கென ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இந்நடவடிக்கையில் சேகரிக்கப்படும் நிதி, இவ்வாண்டு போரால் துன்புறும் உக்ரைனுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கிறிஸ்மஸ் பெருவிழாவுக்காகச் செலவழிக்கும் பணத்தைக் குறைத்து, அதைப் போரால் துன்புறும் உக்ரேனியர்களுக்கு உதவுவோம் என்றும் திருத்தந்தை திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார். பின்னர், இறை மகனும் உலகின் மீட்பருமாகிய இயேசுவின் திருவருகைக்கான தயாரிப்பில் ஒரு புனித திருவருகையை அனுபவிப்பீர்களாக என்று எல்லாத் திருப்பயணிகளையும் வாழ்த்தினார் திருத்தந்தை. இறுதியில், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்