தேடுதல்

மறைக்கல்வியுரை: அக அமைதி நம் தீர்மானங்களை உறுதிசெய்கின்றது

நம் எடுக்கும் தீர்மானங்கள், நீடித்த நிலையான அக அமைதியை உறுதிசெய்வதாய் இருக்கவேண்டும் என்பது குறித்த தன் சிந்தனைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 07, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்புச் சகோதரர் சகோதரிகளே, டிசம்பர் 08, இவ்வியாழன் அமல அன்னை பெருவிழா. ஆன்மிக விழுமியங்களை ஊக்குவிப்பதில் எப்போதும் நாம் துணிச்சலோடு இருப்பதற்கு  இவ்வன்னையிடமிருந்து கற்றுக்கொள்வோம். போரின் கொடுமைகளால் துயருறும் எல்லாருக்காகவும், குறிப்பாக, உக்ரைனில் துன்புறும் மக்களுக்காகவும், நம் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம். இவ்வாறு இப்புதன் பொது மறையுரைக்குப்பின் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நேரம் காலை ஒன்பது மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு, தெளிந்துதேர்தல் குறித்த தனது 11வது மறைக்கல்விப் பகுதியைத் தொடங்கினார்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது; மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது. ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்; அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள்….. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி; அது அமைதியைப் பொழிந்து, உடல்நலனைக் கொழிக்கச் செய்கிறது….. பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்; பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்  (சீராக் 1,12-13.18.23)

புதன் மறைக்கல்வியுரை

புதன் மறைக்கல்வியுரை 071222
புதன் மறைக்கல்வியுரை 071222

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தலில் நம் தீர்மானங்கள் சரியானவை என்பதை உறுதிப்படுத்துகின்ற அல்லது, அவற்றைப் புறக்கணிக்கின்ற அடையாளங்களை அறிந்துகொள்ளும்வண்ணம் நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் குறித்து கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். உண்மையில், பல குரல்களுக்கு மத்தியில் கடவுளின் குரலை அறிந்துகொள்வதற்கு காலம் எவ்வளவு அடிப்படையான அம்சம் என்பது குறித்து சிந்தித்துள்ளோம். அவர் மட்டுமே காலங்களின் ஆண்டவர். இதுவே அவரது தனித்தன்மையைக் குறித்துக் காட்டும் மணிமுடியாகும். நல்லுணர்வுகளைப் பிரித்துக் காட்டும் அடையாளங்களில் ஒன்று அது வழங்கும் காலத்திற்கும் நிலைத்திருக்கவல்ல அமைதியாகும். அந்த அமைதி வழங்குவது, நல்லிணக்கம், ஒற்றுமை, ஊக்கம், ஆர்வம் ஆகியவையாகும். இவற்றில் முக்கியமானது காலம் சோதிக்கப்படுதல். ஞானத்தோடு தெளிந்துதேர்வுசெய்யும் தீர்மானங்கள், நிலைத்த அமைதியை அளிக்கின்றன. ஆன்மிக வாழ்வு வட்டவடிவமானது. அகச் சுதந்திரம், மற்றும், கடவுளின் திருவுளத்திற்குத் திறந்தமனம் ஆகியவற்றின் கனியாக விளங்குகின்ற நம் தீர்மானங்கள், நன்மைத்தனம், நல்லிணக்கம், மற்றும், நம் தினசரி வாழ்வு, நம் உறவுகள், நம் வேலை ஆகியவற்றுக்குள் ஒருங்கிணைப்பைக் கொணர்கின்றன. ஆன்மிக ரீதியில் தெளிந்தமனதோடு எடுக்கும் தீர்மானத்தின் மற்றோர் அடையாளம், உண்மையில் கடவுளுக்காக, அவரது அன்புக்காகச் சுதந்திரமாகவும் அவரது அருளுக்கு நன்றியுடனும் பதிலிறுப்பதில் உறுதியாய் இருப்பதாகும். ஞானம் மற்றும் சரியான முறையில் எடுக்கும் தீர்மானங்கள், நம் வாழ்வில் மனநிம்மதி, ஒழுங்குமுறை, மற்றும் நல்வழி உணர்வு அதிகரிப்பதாலும் உறுதிசெய்யப்படுகின்றது. திருவிவிலியத்தைப் போதிப்பது மற்றும், புனிதர்கள் கொண்டிருக்கும் சான்றுவாழ்வின் முன்மாதிரிகை போன்று, உண்மையான ஞானம், கடவுள் மீதுள்ள அச்சத்திலிருந்து பிறப்பதாகும். அது, நம் வாழ்வு ஆண்டவரின் கரங்களில் உள்ளது என்பதில் உறுதியான நம்பிக்கை வைப்பதாகும். அது, நம் மனிதச் சுதந்திரம், அதன் மிக உன்னத நிறைவை ஆண்டவரின் திருவுளத்திற்கு நம்பிக்கையோடு பணிவதில் கண்டுகொள்வதாகும் என்பதை உறுதிசெய்வதாகும். நல்ல தீர்மானங்கள் நம் தினசரி வாழ்வை மேம்படுத்தும். நாம் எடுத்த தீர்மானங்கள் குறித்து விடுதலையுணர்வில் இருக்கும்போது, நன்றாகத் தெளிந்துதேர்தல் செய்துள்ளோம் என்பதைக் குறித்துக் காட்டும் ஓர் அடையாளமாகும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம், அல்லது அவரை மதிப்பது, நமது தெளிந்துதேர்தலில் உதவுகின்ற இறைஞானத்தின் ஓர் இன்றியமையாத கொடையாகும். அவ்வச்சம், மற்ற அனைத்து அச்சங்களையும் அகற்றுகிறது. ஏனெனில் அவ்வச்சம் அனைத்திற்கும் ஆண்டவரான கடவுளை நோக்கியுள்ளது. அவரது இருத்தலில் எதனாலேயும் நம்மை அமைதியின்றி இருக்கச் செய்ய இயலாது.

புதன் மறைக்கல்வியுரை 071222
புதன் மறைக்கல்வியுரை 071222

இவ்வாறு தன் இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வருகின்றது, அப்பெருவிழா நாளில், புதிதாகப் பிறந்த இயேசுவை, இறைமகனை மற்றும், அமைதியின் இளவரசரை வரவேற்க இத்திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் தயாரிப்போம் என்று கூறினார். பின்னர், உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2022, 10:59