தேடுதல்

திருத்தந்தையுடன் அமைதியை உருவாக்க உழைக்கும் அமைப்பினர் (Leaders pour la Paix) திருத்தந்தையுடன் அமைதியை உருவாக்க உழைக்கும் அமைப்பினர் (Leaders pour la Paix) 

அமைதியின் தலைவர்களாக இருப்பது பெரிய பொறுப்பு – திருத்தந்தை

மனித உயிர்களின் அழிவு, மக்களின் துன்பம், அரசியல் கட்டமைப்புகளின் கண்மூடித்தனமான செயல், மனிதநேயக் கொள்கை மீறல் ஆகியவை போரின் இரண்டாம் நிலை விளைவுகள் அல்ல, மாறாக அவைகள் உலகளாவியக் குற்றங்கள். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதியின் தலைவர்களாக இருப்பது என்பது வெறும் கடமை மட்டுமல்ல, மாறாக அது நம் ஒவ்வொருவரிடத்திலும் கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொறுப்பு என்றுக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 02, இவ்வெள்ளியன்று உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்,  அமைதியை உருவாக்க உழைக்கும் தலைவர்களுக்கான ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களை வத்திக்கானில் சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

மனித உயிர்களின் அழிவு, மக்களின் துன்பம், அரசியல் கட்டமைப்புகளின் கண்மூடித்தனமான செயல், மனிதநேயக் கொள்கை மீறல் ஆகியவை போரின் இரண்டாம் நிலை விளைவுகள் அல்ல, மாறாக அவைகள் உலகளாவியக் குற்றங்கள் என கூறியுள்ள  திருத்தந்தை, நாம் கடந்து செல்லும் காலகட்டத்தில் அமைதிக்கான தலைவராக இருப்பது வெறும் கடமை மட்டுமல்ல, மிகப்பெரிய பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

அமைதியைக் கட்டியெழுப்ப விருப்பமின்றி செயல்பட்டால் போரினால் அச்சுறுத்தப்பட்ட மனித குடும்பம் இன்னும் பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் எனவும், போரை எதிர்கொள்ள துப்பாக்கிகளை அமைதிப்படுத்துவது முதல் படியாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் உலகளாவிய உறவுகளின் வழக்கமான வடிவங்களுக்கு அப்பால் செல்லவும் தயாராக இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.

அமைதியைக் கட்டியெழுப்புவது வறுமையை ஒழித்தல், பசியைப் போக்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தல், பொதுவான இல்லமாகிய படைப்பை பாதுகாத்தல், அடிப்படை உரிமைகளை மேம்படுத்துதல், மனித இடம்பெயர்வால் ஏற்படும் பாகுபாடுகளைக் களைதல், வளர்ச்சி செயல்முறைகளைத் தொடங்குதல் போன்றவற்றிற்குக் காரணமாகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அமைதியின் தலைவர்கள்

அமைதிக்காக எழுப்பப்படும் கேள்விகளுக்கான புதிய பதில்களை ஒருங்கிணைக்கும் வகையில் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், வளர்ந்து வரும் நெருக்கடிகளை நிர்வகிப்பதில் புதுமைகளை உருவாக்கவும் ஒவ்வோர் ஆண்டும் அமைதிக்கான தலைவர்கள் ஒரு வருடாந்திர அறிக்கையை முன்வைத்து கூடுகின்றனர்.

உலகளாவிய நிலுவைகளில், கடுமையான விளைவுகள் மற்றும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைதியற்ற சூழலை மாற்ற,  செயல்திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் இந்நாட்களில் உருவாக்கப்பட்டு, அவ்வமைப்பின் தலைவர்கள் குழு மற்றும் மூத்த அரசியல் தலைவர்களிடம் அனுமதியுடன் அதன் உள்ளடக்கம் மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2022, 15:10