தேடுதல்

Amitié Judéo-Chrétienne de France அமைப்பினர் சந்திப்பு Amitié Judéo-Chrétienne de France அமைப்பினர் சந்திப்பு 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் உரையாடலைத் தொடருமாறு அழைப்பு

Amitié அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான Jules Isaac என்பவர், இரண்டாம் உலகப் போர் கொடுந்துயரங்களுக்குப்பின், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மீண்டும் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உலகில், குறிப்பாக ஐரோப்பாவில் யூதமத விரோத மனநிலையும், கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையும் இடம்பெற்றுவந்தாலும்கூட அவ்விரு மதத்தவரும் தாங்கள் மேற்கொள்ளும் பொதுவான பாதையைக் காத்துக்கொள்ளுமாறு, யூத-கிறிஸ்தவ நட்புறவு அமைப்பு ஒன்றிடம் இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 12, இத்திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பிரான்சின் Amitié Judéo-Chrétienne என்ற யூத-கிறிஸ்தவ நட்புறவு அமைப்பின் அறுபது உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இவ்விரு மதத்தவருக்கிடையே புறக்கணிப்புகள் மற்றும், வெறுப்புணர்வுகள் இடம்பெற்றிருப்பதையும் தவிர்த்து, அவ்வமைப்பினர் தங்களுக்கு இடையே நிலவும் உறவுகளைக் காத்து வருவதற்கு நன்றி கூறியுள்ளார்.

Nostra Aetate போதனை

இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் 75ஆம் ஆண்டையொட்டி அதன் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Amitié அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான Jules Isaac என்பவர், இரண்டாம் உலகப் போர் கொடுந்துயரங்களுக்குப்பின், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மீண்டும் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்று கூறியுள்ளார்

Jules Isaac அவர்கள், கிறிஸ்தவர் அல்லாத மற்ற மதத்தவரோடுள்ள உறவு மற்றும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயுள்ள பொதுவான மாபெரும் ஆன்மீக மரபை நினைவுகூரும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க கொள்கை விளக்கம் அறிக்கையிடுவதற்கு பெரியளவில் ஆதரவு தெரிவித்தவர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒருவர் ஒருவர் பற்றிய அறிவு, புரிந்துணர்வு, மதிப்பு மற்றும் நட்புறவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் வளர்வதற்கு இந்த அமைப்பு தன்னையே அர்ப்பணித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த அமைப்பு மேற்கொண்டுவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2022, 14:23