திருத்தந்தை: 86வது பிறந்த நாளில் 3 பிறரன்புப் பணியாளர்களுக்கு...
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள பிறரன்புப் பணியாளர்கள் மூன்று பேரைக் கவுரவப்படுத்தி, டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று தனது 86வது பிறந்த நாளைச் சிறப்பித்தார்.
ஏழ்மையிலும் கடும் ஏழ்மைநிலையில் வாழ்கின்ற மக்களுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள, அருள்பணி Hanna Jallouf, Wué என அறியப்படும் Gian Piero, Silvano Pedrollo ஆகிய மூன்று பேருக்கு, தனது நன்றியை வெளிப்படுத்தும்விதமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விருதுகளித்து தன் 86வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.
உரோம் நகரில் வத்திக்கானின் புனித போதுரு வளாகத்துக்கு அருகிலுள்ள புனித அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபையினர் நடத்துகின்ற இல்லத்துக்குச் சென்று இம்மூன்று பேருக்கும், நன்றி மலர்க்கொத்துக்களோடு நினைவுச்சின்னம் ஒன்றையும் ஒவ்வொருவருக்கும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
விருதுபெறும் மூன்று பேர்
பிரான்சிஸ்கன் அருள்பணியாளராகிய Jallouf அவர்கள், உள்நாட்டுப் போரால் சிதைந்துபோயுள்ள சிரியாவில் ஏழைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பவர்.
வீடற்ற மனிதராகிய.Gian Piero அவர்கள், தினமும் தனக்குக் கிடைக்கும் தர்மத்தில் ஒரு பகுதியை தன்னைவிட மோசமாக இருப்பவர்களுக்கு அளித்து வருபவர்.
இத்தாலியின் வெரோனா நகரில் தொழில்முனைபவரான Pedrollo அவர்கள், தனது தொழிலில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதியை ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, இந்தியா ஆகிய பகுதிகளில் பள்ளிகள் கட்டவும், கிணறுகள் வெட்டவும், நலவாழ்வு வசதிகளை அமைத்துக் கொடுக்கவும் செலவழித்து வருகிறவர்.
நினைவுச்சின்னம் - அன்பின் ஜன்னல்கள் உலகில் திறக்கப்பட்டுள்ளன
நினைவுச்சின்னமானது, நிலைமேடையின்மீது அமைக்கப்பட்டுள்ள கனசதுர கட்டைக்குள் ஒரு சிறிய உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளது. இந்த கனசதுரம், உலகைத் தாங்கியிருக்கும் அன்பின் அடையாளமாகும். உலக உருண்டையில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னல், அன்னை தெரேசா ஒரு குழந்தையை அரவணைப்பதைக் காட்டியுள்ளது.
இந்த ஜன்னல் பற்றிய கருத்தியலானது, புனித அன்னை தெரேசா இறைபதம் சேர்ந்தபோது, அவர் பற்றி திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியதிலிருந்து எழுந்ததாகும். அன்னை தெரேசா ஒரு திறந்த ஜன்னல், அதிலிருந்து இயேசு வெளியே பார்க்கிறார், மற்றும், உலகின் பல பகுதிகளில் வாழ்கின்ற பல ஏழைகள் மீது புன்னகைக்கிறார், அவர்களுக்கு ஆறுதலும் மாண்பும் தருகிறார் என்று திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்