தேடுதல்

திருத்தந்தை: உலகின் அமைதிக்காக அன்னை மரியாவிடம் செபம்

உரோம் இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியாவிடம் உக்ரைனுக்காகச் செபித்தபோது இடையில் செபத்தை நிறுத்தி, துன்புறும் அந்நாட்டை நினைத்து கண்ணீர் சிந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வயதுமுதிர்ந்தோர், இளையோர் என இப்பூமியில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும், உலகின், குறிப்பாக உக்ரைனின் அமைதிக்காகவும், இவ்வியாழன் மாலையில் உரோம் இஸ்பானிய வளாகத்தில் அமைந்துள்ள உயரமான தூணின் உச்சியில் வீற்றிருக்கும் அமல அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 08ம் தேதி சிறப்பிக்கப்படும் தூய கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று, இஸ்பானிய வளாகம் சென்று அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தும் பாரம்பரிய நிகழ்வைமுன்னிட்டு, இவ்வியாழன் மாலையில் அவ்வளாகத்திற்குச் சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அச்சமயத்தில் வெண்மைநிற ரோஜா மலர்க்கொத்தை அத்தூணுக்கு அடியில் வைத்து, துன்புறும் அனைத்து மக்களுக்காகவும் செபிக்கும் பழக்கத்தை திருத்தந்தையர் கொண்டிருக்கின்றனர்.

அன்னை மரியாவிடம் உலகிற்காக திருத்தந்தை செபம்
அன்னை மரியாவிடம் உலகிற்காக திருத்தந்தை செபம்

அமைதிக்காக செபம்

இவ்வியாழன் மாலையில் உலகின், குறிப்பாக போரினால் பெருந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைனின் அமைதிக்காக அன்னை மரியாவிடம் செபித்த திருத்தந்தை, ஈராண்டுகளுக்குப்பின் மீண்டும் இவ்விடத்திற்கு வந்துள்ள நான், அருகிலும் தொலைவிலும் உள்ள உம் பிள்ளைகளின் நன்றி மற்றும், வேண்டுதல்களை உம்மிடம் கொண்டுவந்துள்ளேன் என்று கூறினார்.

அன்னை மரியாவிடம் உக்ரைனுக்காகச் செபித்தபோது இடையில் செபத்தை நிறுத்தி, துன்புறும் அந்நாட்டை நினைத்து கண்ணீர் சிந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், தங்களின் வருங்காலத்திற்காகச் செபிக்கும் இளையோர், மற்றும், திருக்குடும்பத்தின் தூண்டுதலைத் தேடுகின்ற இளம் தம்பதியரின் வேண்டுதல்களையும் அன்னை மரியாவிடம் திருத்தந்தை எடுத்துக் கூறினார்.

பாவமின்றி பிறந்த மரியே, அன்பு, காழ்ப்புணர்வையும், உண்மை பொய்களையும், அமைதி போர்களையும், மன்னிப்பு குற்றங்களையும் வெற்றிகொள்ளும் என்ற நம்பிக்கையோடு உம்மை நோக்குகிறோம் என்றும் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை: அன்னை மரியாவிடம் உலகிற்காக செபம்
திருத்தந்தை: அன்னை மரியாவிடம் உலகிற்காக செபம்

Salus Populi Romani திருப்படத்தின் முன்பு செபம்

இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியாவிடம் உலகின் அமைதிக்காகச் செபித்தபின்னர், உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று உரோம் நகருக்குச் சுகமளிக்கும் Salus Populi Romani அன்னை மரியா திருப்படத்தின் முன்பாகவும் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அச்செபத்தில் அக்காலத்தில் உரோம் மக்களைத் பெருந்தொற்று தாக்கியிருந்த சமயத்தில் இவ்வன்னை எவ்வாறு அம்மக்களைக் காப்பாற்றினார் என்பதை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2022, 17:50