தேடுதல்

தன்னார்வலர்களிடம் திருத்தந்தை: கருணையின் கைவினைஞர்களாக இருங்கள்

உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர் தன்னார்வப் பணியாற்றுகின்றனர். அனைத்துக் கண்டங்களிலும் 86 கோடியே 24 இலட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர் - ஐ.நா.வின் தன்னார்வலர் திட்ட அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

கருணையின் கைவினைஞர்களாக இருப்பதற்குத் தங்களையே அர்ப்பணிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் மேலும் அதிகரிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 01, இவ்வியாழன் மாலையில் காணொளிச் செய்தி ஒன்றின் வழியாக, உலகின் அனைத்து கத்தோலிக்கரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மாதத்திற்கும் தான் தெரிவுசெய்துள்ள பொதுக் கருத்து குறித்து காணொளிச் செய்தி வழியாக விளக்கி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த டிசம்பர் மாதத்தை இலாப நோக்கமற்ற தன்னார்வ நிறுவனங்கள் மற்றும், அவற்றில் பங்குகொள்ளும் எல்லாருக்காகவும் அர்ப்பணித்து, அவற்றுக்காக இறைவேண்டல் செய்யுமாறு, அழைப்புவிடுத்துள்ளார்.

மனித முன்னேற்றம் மற்றும், பொது நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ள இந்நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, அவர்கள், மக்களுக்காக மட்டுமல்லாமல், இரக்கத்தின் கைவினைஞர்களாக, மக்களோடு நெருக்கமாக இருந்து, மற்றவரின் தேவைகளுக்கு எப்போதும் செவிமடுப்பவர்களாக இருக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

மனித மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துள்ள இலாப நோக்கமற்ற தன்னார்வ நிறுவனங்கள், பொது நலனுக்காக அர்ப்பணித்த மக்களைக் கண்டறிந்து பன்னாட்டு ஒத்துழைப்புக்கான புதிய பாதைகளை இடைவிடாமல் தேட நாம் கடவுளை மன்றாடுவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.   

 தன்னார்வலர்கள், சமுதாயத்தில் மனித மற்றும், கிறிஸ்தவ முகத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகெங்கும் பணியாற்றுகின்ற இலட்சக்கணக்கான தன்னார்வ நிறுவனங்கள் மற்றும், கழகங்களில் பெரும்பான்மை,  பல நேரங்களில் வெளிப்படையாகத் தெரியாமலும், சட்டரீதியாக அங்கீகாரம் பெறாமலும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

தன்னார்வலர்கள், தங்களுக்கு இடையேயும், அரசுகளோடும் ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியுள்ள திருத்தந்தை, இரக்கத்தின் கைவினைஞர்கள், மற்றும், நம்பிக்கையை அதிகரிப்பவர்களாக, பொது நலனுக்காகத் தங்களையே அர்ப்பணிக்கும் தன்னார்வலர்கள் உலகிற்குத் தேவைப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா.வின் தன்னார்வலர் திட்ட அமைப்பின் (UNV) கணிப்புப்படி, உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர் தன்னார்வப் பணியாற்றுகின்றனர் என்றும், அனைத்துக் கண்டங்களிலும் 86 கோடியே 24 இலட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர் என்றும், இவர்கள் 10 கோடியே 90 இலட்சம் மணி நேரங்கள் முழுநேரப் பணியாளர்களாக வேலை செய்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.  

பல தன்னார்வ நிறுவனங்கள், கிறிஸ்தவப் பண்பால் உள்தூண்டுதல் பெற்றவை, மற்றும், மிகக் கடினமான சூழல்களில் நற்செய்திக்குச் சான்றுபகரும் வழிகளைத் தேடுபவை என்றும் திருத்தந்தை  கூறியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 15:10