திருத்தந்தை: தொழிலாளருக்கு மாண்புள்ள பணி ஒப்பந்தம் தேவை
மேரி தெரேசா: வத்திக்கான்
தொழிலாளர்கள்மீது, குறிப்பாக ஏழைகள், பாதுகாப்பற்றோர், குரலற்றோர் ஆகியோர் மீது மிகுந்த அக்கறை காட்டி, சமுதாயத்தில் நீதி மற்றும், ஒருமைப்பாட்டின் புளிக்காரமாக இருக்குமாறு கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பு ஒன்றிடம் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, அவ்வியக்கத்தின் ஏறத்தாழ ஐந்நூறு பேரை, டிசம்பர் 09, இவ்வெள்ளியன்று வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் இவ்வியக்கத்தினர் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, தூய்மைப்படுத்தல், ஒரு புதிய காலத்தை நடுதல் ஆகிய தலைப்புக்களில் தன் எண்ணங்களை எடுத்துரைத்தார்.
நாம் எல்லாரும் பாவிகள், மற்றும் கடவுளின் இரக்கம் தேவைப்படுகிறவர்கள் என்பதால், எல்லா மனித அனுபவங்களுக்கும் தூய்மைப்படுத்துதல் அவசியம் என்றும், மனமாற்றத்திற்குத் திறந்தமனதாய் இருப்பது, பலவீனம் அல்ல, மாறாக அது துணிச்சல் மற்றும், வலிமையின் அடையாளம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
கிறிஸ்தவத் தொழிலாளர்கள், திருஅவைச் சமூகங்களைத் தங்களின் சொந்த வீடுகளைப் போன்று உணரவேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
ஒருமைப்பாட்டில் புதுப்பித்தல்
ஒரு நாளின் பல்வேறு நேரங்களில் வேலைக்கு அழைக்கப்பட்ட, திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை (காண்க.மத்.20,1-16) பற்றிக் குறிப்பிட்டு, தங்களின் வேலைகளுக்கு மாண்புள்ள ஊதியம் கிடைக்கத் தகுதியுள்ள பெண்கள், மற்றும், இளையோர் உட்பட எவருமே வேலையிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டோம் என உணரக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.
திருஅவையின் சமூகக் கோட்பாடு, புதுப்பித்தலுக்கு ஆதாரமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒருமைப்பாடு மற்றும், ஆதரவாக இருத்தல் ஆகியவை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தின் அடிப்படையாக இருப்பவை என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்றும், ஆதரவு இல்லாமல், உண்மையான ஒருமைப்பாடு இருக்காது என்றும், ஏனெனில் அவ்வாறு இருக்கும்போது திறமையுள்ள மக்களுக்கு குரல் கொடுக்கும் ஆபத்தை எதிர்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
ஒப்புரவு மற்றும், உடன்பிறந்த உணர்வை ஊக்குவிப்பதற்குரிய வழிகளைத் தேடுகையில் ஒருபோதும் நம்பிக்கை இழக்காதிருக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவ்வியக்கத்தினர் தங்களது பணியை ஆர்வத்தோடு ஆற்றுவதற்கு தொழிலாளரின் பாதுகாவலரான புனித யோசேப்பு எப்போதும் தூண்டுதலாய் இருப்பாராக என்றுரைத்து தன் உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்