திருத்தந்தை: கிறிஸ்மஸ் காலத்தில் உக்ரைனை மனதில் வையுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
போரினால் கடுமையாய்த் துன்புறும் உக்ரேனிய சகோதரர் சகோதரிகளை, இத்திருவருகை, மற்றும், கிறிஸ்மஸ் காலங்கள் முழுவதும் நம் இதயங்களில் இருத்தி, மனிதாபிமான உதவிகள் வழியாக அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களோடுள்ள நம் உடனிருப்பைப் புதுப்பிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று கூறியுள்ளார்.
டிசம்பர் 14, இப்புதன் காலையில் வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னர், போரால் துன்புறும் உக்ரேனியர்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்மஸை உக்ரேனியர்களோடு நம் இதயங்களில் சிறப்பிப்போம் என, திருப்பயணிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்கள், மற்றும், அப்பெருவிழாவிற்கு ஆன்மிகத் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ள நாம், நம் இதயங்களிலும் சிந்தனைகளிலும் உக்ரேனியர்களை வைத்து அவர்களுக்காகச் செபிப்போம் மற்றும், அவர்களோடு நமக்கிருக்கும் அருகாமையைத் தெரிவிப்போம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
கிறிஸ்மஸை மிக எளிமையாகக் கொண்டாடுவோம், பரிசுகளை அம்மக்களோடு பகிர்ந்துகொள்வோம் எனவும், எளிமையான கொண்டாட்டத்தால் சேகரித்த நிதியால், கடுங்குளிர், நோய், மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகளின்மை, பசி போன்றவற்றால் துயருறும் அம்மக்களுக்கு உதவுவோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
உக்ரேனியர்களோடு போலந்து காரித்தாஸ்
மேலும், இப்பொது மறைக்கல்வியுரையில் போலந்து திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுவரும், "குடும்பத்திற்கு குடும்பம்" என்ற திருவருகைக் கால நடவடிக்கையில் அந்நாட்டினர் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் ஆயுதம் ஏந்திய மோதல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும், மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வோருக்கு உதவுவதற்கென ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையில் சேகரிக்கப்படும் நிதி, இவ்வாண்டு போரால் துன்புறும் உக்ரைனைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்