தேடுதல்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  

டிசம்பர் 31, 2022ல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இறைபதம் எய்தினார்

உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையை 8 ஆண்டுகள் மிகச் சிறப்புடன் வழிநடத்திச் சென்ற, 95 வயது நிரம்பிய நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டிசம்பர் 31, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு இறைபதம் எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வரலாறு

மேரி தெரேசா: வத்திக்கான்

 உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையை எட்டு ஆண்டுகள் மிகச் சிறப்புடன் வழிநடத்திச் சென்ற, அன்பும், பாசமும், பண்பும், அறிவும், ஆன்மிகமும் நிறைந்த, 95 வயது நிரம்பிய நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டிசம்பர் 31, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.04 மணிக்கு இறைபதம் எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2005ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டு மார்ச் 24ம் தேதி தனது தலைமைப் பணியைத் தொடங்கினார். இவர் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, திருப்பீடத்தில் இவர் தலைமையேற்று நடத்திய, கர்தினால்கள் அவை முடிந்து எல்லாரும் களைந்துசெல்லவிருந்தவேளை, அனைவரையும் அமரச்செய்து அந்த தலைமைப் பணி ஓய்வு அதிர்ச்சிச் செய்தியை அறிவித்தார். தனது உடல்நலத்தைக் காரணம் காட்டி, தனது தலைமைப்பணியை நிறைவு செய்வதாக அவர் அறிவித்தார். எவரும் எதிர்பார்த்திராத இச்செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஏனெனில் திருஅவை வரலாற்றில் 700க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1294ஆம் ஆண்டில் பணி ஓய்வை அறிவித்த திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்தினுக்குப்பின் முதன்முறையாக தலைமைப் பணி ஓய்வை அறிவித்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே. பதவி வெறிபிடித்த இன்றைய உலகில், திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களின் தாழ்மையையும், துணிச்சலையும், மத வேறுபாடின்றி அனைவரும் வியந்து பாராட்டினர். ஏனெனில், திருத்தந்தையாக இருப்பவர், இறப்புவரை அப்பணியில் இருக்கலாம் என்ற நிலை உள்ளது. திருஅவை வரலாற்றில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தையாக நீண்டகாலம் வாழ்ந்தவர், மற்றும், முன்னாள் திருத்தந்தை என முதன்முதலில் அழைக்கப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, புனித சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தெற்கு ஜெர்மனியின் Marktl என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இறையியல் வல்லுனர் என, உலக அளவில் புகழ்பெற்ற, திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வோம். நம் வாழ்வில் கிறிஸ்து இயேசுவை மையமாகக்கொண்டு வாழ வேண்டுமென்ற அவரின் போதனைகளைப் பின்பற்ற முயற்சிப்போம்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணித் தேர்வு

அது 2005ம் ஆண்டு மார்ச் 19.  சனிக்கிழமை. அன்று நாள் முழுவதும், குறிப்பாக அன்று  மாலை வத்திக்கான் புனித பேதுரு வளாகம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. எல்லாருடைய கண்களும் வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த புகைக்கூண்டையே பார்த்தவண்ணம் இருந்தன. புதிய திருத்தந்தை அறிவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மக்கள், மாலையில், அந்த புகைக்கூண்டிலிருந்து வெள்ளைப் புகை வெளிவந்ததைப் பார்த்து ஆரவாரித்தனர். அதற்குச் சிறிது நேரத்தில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஓங்கி ஒலித்தன. இந்த மணிகளின் ஓசையைக் கேட்ட உரோம் மக்களும், உரோம் நகருக்கு வந்திருந்த திருப்பயணிகளும், சுற்றுலா பயணிகளும்,  நாலா பக்கங்களிலிருந்தும் வத்திக்கான் தூய பேதுரு வளாகம் நோக்கி ஓடி வந்தனர். சில நிமிடங்களுக்குள் வளாகம் நிரம்பி வழிந்தது. மக்கள் திரள் ஆவலோடு பெருங்கோவிலின் நடுமாடத்தை நோக்கியபடி இருக்கையில், ‘நமக்கு ஒரு புதிய திருத்தந்தை கிடைத்துள்ளார்’ என இலத்தீனில் அறிவித்த கர்தினால் ஹோர்கே மெதினா அவர்கள், முதலில் யோசேப் என்றார். அதைத் தொடர்ந்து இராட்சிங்கர் என்றார். யோசேப் என்று சொன்னவுடனேயே ஏறக்குறைய எல்லாரும், புதிய திருத்தந்தை யார் என யூகித்துக்கொண்டார்கள். ஏனெனில் கர்தினால் யோசேப் அலாய்சியஸ் இராட்சிங்கர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களுக்கு, நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக, இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர்.

புதிய திருத்தந்தையின் பெயர் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின்னர் வத்திக்கான் பெருங்கோவிலின் நடுமாடத்தில், திருத்தந்தைக்குரிய வெண்மைநிற அங்கியில் தோன்றிய புதிய திருத்தந்தையாகிய, கர்தினால் இராட்சிங்கர் அவர்கள்,

“அன்பு சகோதரர், சகோதரிகளே, புனித பேதுருவின் வழிவருபவராக, மாபெரும் திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களுக்குப் பின்னர், ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில், எளிமையும், தாழ்மையும் நிறைந்த பணியாளராக, கர்தினால்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். போதுமான திறமையற்ற கருவிகளுடன்கூட எவ்வாறு பணியாற்றுவது மற்றும் செயல்படுவது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்பதே உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, நான் உங்களின் செபங்களில் நம்பிக்கை வைக்கிறேன். உயிர்த்த ஆண்டவரின் மகிழ்வில், அவரது தவறாத உதவியில் நம்பிக்கை வைத்து, நாம் முன்னோக்கிச் செல்வோம். ஆண்டவர் நமக்கு உதவுவார். புனித அன்னை மரியா நம் சார்பாக இருப்பார், உங்களுக்கு நன்றி

என்று இத்தாலியத்தில் சொல்லி, பெனடிக்ட் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று சொன்னார். இவ்வாறு அவர் அறிவித்தபோது, மக்கள் சற்று வியப்புடன் நோக்கினர். ஏனெனில் பெனடிக்ட் என்ற பெயரைக் கொண்டிருந்த கடைசி திருத்தந்தை, 1914ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலியரான கர்தினால் ஜாக்கோமோ தெல்லா கியேசா (Giacomo Della Chiesa) அவர்கள் ஆவார். ஆஸ்ட்ரிய கர்தினால் கிறிஸ்டோப் ஷோன்பார்ன் அவர்கள், புதிய திருத்தந்தை, இந்தப் பெயரைத் தெரிவு செய்தது பற்றி, வத்திக்கான் வானொலியில் பேசியபோது, முதல் உலகப் போர் சமயத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் (1914–1922), உலக அமைதிக்காக அதிகமாக குரல் எழுப்பியவர். மேலும், புனித பெனடிக்ட், ஐரோப்பாவின் பாதுகாவலர். எனவே, இந்த இரண்டையும் இணைத்து, கர்தினால் இராட்சிங்கர் அவர்கள், பெனடிக்ட் என்ற பெயரைத் தெரிவு செய்திருக்கலாம் எனக் கூறினார்.

தலைமைப்பணியிலிருந்து ஓய்வு

ஜெர்மன் நாட்டவரான கர்தினால் இராட்சிங்கர் அவர்கள், 16ம் பெனடிக்ட் என்ற பெயருடன், திருஅவையின் 265வது திருத்தந்தையாக, 2005ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி தனது தலைமைப் பணியைத் தொடங்கினார். இவர், தனது  எட்டாவது ஆண்டு தலைமைப்பணி காலத்தில், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, திடீரென அறிவித்தபோது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஏனெனில், கடந்த எழுநூறுக்கு மேற்பட்ட ஆண்டுகளில், இவ்வாறு பணி ஓய்வுபெறுவதாக அறிவித்த முதல் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் ஆவார். 1415ம் ஆண்டு கட்டாயத்தின்பேரில் பதவி விலகிய, திருத்தந்தை 12ம் கிரகரி அவர்களுக்குப் பின்னர், பதவி விலகிய முதல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அதிலும், தானே முன்வந்து, சுயவிருப்பத்தின்பேரில், பதவி விலகியது, 1294ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் செலஸ்தீன் அவர்களுக்குப்பின், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே. அன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கர்தினால்கள் அவையில், தனது தலைமைப்பணி ஓய்வை இலத்தீனில் வாசிக்கையில், வயதின் இயலாமை காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் அறிவித்தார். அதன்பின்னர் காஸ்தெல்கந்தோல்ஃபோவிலுள்ள, திருத்தந்தையரின் கோடை விடுமுறை மாளிகையில் சிறிது நாள்கள் ஓய்வெடுத்த பின்னர், வத்திக்கான் திரும்பி, வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae என்ற இல்லத்தில், அமைதியான செப வாழ்வைத் தொடங்கினார். திருஅவைக்காகத் தான் செபிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இல்லத்தை 1990ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், ஆழ்நிலை துறவு சபைக்காக அமைத்தார்.

திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்க்கை வரலாறு

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மன் நாட்டில், ஆஸ்ட்ரியாவின் எல்லையிலுள்ள பவேரியா மாநிலத்தில், Marktl am Inn என்ற சிற்றூரில், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி புனித சனிக்கிழமையன்று பிறந்தார். திருநீராட்டில் யோசேப் அலாய்சியஸ் இராட்சிங்கர் என்ற பெயரைப் பெற்றார். இவரது தந்தை, ஹிட்லரின் நாத்சி கொள்கைகளை, கடுமையாய் எதிர்த்ததால், இவரது குடும்பம் நாத்சிகளால் துன்புறுத்தப்பட்டது. பதினான்கு வயது சிறுவன் இராட்சிங்கர், ஜெர்மன் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு, சிறையில் இருந்து, இறுதியில், 1945ம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டான். அதன்பின்னர், இவரும், இவரது அண்ணன் ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களும், 1945ம் ஆண்டு நவம்பரில், குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். 1951ம் ஆண்டில், இவ்விருவரும் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். 1946ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை, மெய்யியல் மற்றும் இறையியல் கற்றார் யோசேப் இராட்சிங்கர். 1953ம் ஆண்டில், ‘திருஅவையின் புனித அகுஸ்தீன் கோட்பாடுகளில் இறைமக்கள் மற்றும், இறைவனின் இல்லம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் இவர். பேராசிரியாரகப் பணியாற்றுவதற்கு, இரு முனைவர் பட்டங்கள் தேவைப்பட்டதால், தனது இரண்டாவது முனைவர் பட்டப்படிப்பில், 13ம் நூற்றாண்டு இறையியல் மற்றும் மெய்யியல் அறிஞரான பிரான்சிஸ்கன் துறவி புனித பொனவெந்தூர் பற்றி ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றார். 1958ம் ஆண்டில், Freising கல்லூரியில் பேராசிரியாரகப் பணியைத் தொடங்கினார்.

இராட்சிங்கர் அவர்கள், 1959ம் ஆண்டில், போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியேற்ற முதல் நாளில், நம்பிக்கையின் கடவுள் மற்றும் மெய்யியலின் கடவுள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர், 1962ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் வல்லுனராக கலந்துகொள்ள அழைப்புப் பெற்று, அதில் கலந்துகொண்டார். 1965ம் ஆண்டில் பொதுச்சங்கம் முடிந்தவுடன் ஜெர்மனிக்குத் திரும்பி, பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். 1968ம் ஆண்டில், கிறிஸ்தவத்திற்கு முன்னுரை என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, மியுனிச் பேராயராக இவரை நியமித்து, அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி, கர்தினாலாகவும் உயர்த்தினார், 1981ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருப்பீட நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத் தலைவராக நியமித்தார். அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை இந்தப் பணியை ஆற்றினார். இந்தப் பணிக்காலத்தில், குடும்பக்கட்டுப்பாடு, ஓரினச்சேர்க்கை, பல்சமய உரையாடல் போன்றவற்றில் திருஅவையின் போதனைகள் உட்பட, கத்தோலிக்கக் கோட்பாடுகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டார். கிறிஸ்தவம், அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்படும் ஒரு மதம் என்பதை இவர் அடிக்கடி விளக்கி வந்தார். மனிதர் பற்றியும், மனிதர் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், அதனால் அவர்கள் மாண்புடன் மதிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசியுள்ளார். 1998ம் ஆண்டில் கர்தினால்கள் அவையின் துணைத் தலைவராகவும், 2002ம் ஆண்டில் அந்த அவையின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார். பன்னாட்டு இறையியல் கழகத் தலைவர் (1982-2005), பாப்பிறை விவிலிய கழகத் தலைவர் (1982-2005) போன்ற முக்கிய பணிகளையும் இவர் ஆற்றியுள்ளார்.  

திருத்தந்தையாக.....

கர்தினால் யோசேப் இராட்சிங்கர் அவர்கள், தனது 78வது வயதில், திருஅவையின் 265வது திருத்தந்தையாக, 2005ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் பணியைத் தொடங்கினார். இவர், திருத்தந்தை 12ம் கிளமென்ட் (1730–1740) அவர்களுக்குப்பின், வயது முதிர்ந்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், நீண்ட காலம் கர்தினாலாகப் பணியாற்றிய திருத்தந்தையருள், திருத்தந்தை 13ம் பெனடிக் (1724–1730) அவர்களுக்குப்பின் இவரே.  2005ம் ஆண்டு இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், Time இதழ், உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நூறு பேர் பட்டியலில் இவரையும் இணைத்திருந்தது. 2005ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற இவரின் முதல் புதன் பொது மறையுரையில், பெனடிக்ட் என்ற பெயரை,  தான் தேர்வுசெய்ததற்கான காரணத்தை விளக்கினார்.

பெயர்க் காரணம்

“முதலில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், போரின் துன்பங்கள் நிறைந்த காலத்தில், திருஅவையை வழிநடத்திய, அமைதியின் துணிச்சலான இறைவாக்கினராக அவரை நினைவுகூர்கிறேன். அவரின். பாதக்கமலங்களைப் பின்பற்றி, மக்களுக்கிடையே ஒப்புரவும், நல்லிணக்கமும் ஏற்படும் பணியில், எனது திருப்பணியை அர்ப்பணிக்கின்றேன். அதோடு, நூர்சியா நகர் புனித பெனடிக்ட், ஐரோப்பாவின் துணை பாதுகாவலர். அப்புனிதரின் வாழ்வே, ஐரோப்பாவின் கிறிஸ்தவ வேர்களை வெளிவரச் செய்கிறது. நம் கிறிஸ்தவ வாழ்வில், கிறிஸ்துவே மையம் என்பதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு வாழ அவரது உதவியைக் கேட்போம். நம் எண்ணங்களிலும், செயல்களிலும் கிறிஸ்துவே எப்போதும் முதலிடம் வகிப்பாராக”.

அருளாளர் நிலை நடைமுறை

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2005ம் ஆண்டு மே 9ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக உயர்த்தப்படுவதற்குரிய படிநிலைகளை ஆரம்பித்து வைத்து, அதனை மே 13ம் தேதி பாத்திமா அன்னை விழாவன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பொதுவாக ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் சென்றே இந்த நடைமுறை தொடங்கப்படும். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த, அருளாளராக உயர்த்தும் திருவழிபாட்டை நிறைவேற்ற கர்தினால் ஒருவரை நியமித்தார். புனிதர்களாக உயர்த்தும் திருவழிபாடுகளை மட்டும் இத்திருத்தந்தை நிறைவேற்றினார். கேரளாவின் புனித அல்போன்சா உட்பட பலரை இவர் புனிதர்களாக அறிவித்தார். 2005ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி முதல், 2012ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முடிய, 45 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2012ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, Bingen நகர் ஹில்டெகார்டு மற்றும் அவிலா நகர் யோவான் ஆகிய இருவரையும், திருஅவையின் 34வது, 35வது மறைவல்லுனர்களாக அறிவித்தார்.

திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருப்பீட தலைமையகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. 2006ம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருப்பீட புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கு மேய்ப்புப்பணி அவை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை ஆகிய இரண்டையும், ஒரே தலைவரின்கீழ் கொண்டு வந்தார். கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோ அவர்கள், அவற்றிற்குத் தலைவராகப் பணியாற்றினார்.  2009ம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்றபின், இந்த அவைகள் மீண்டும் தனித்தனி தலைவர்களுடன் செயல்படத் தொடங்கின. 2006ம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையை, குறுகிய காலத்திற்கு, கலாச்சார அவையுடன் இணைத்தார். 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், புதியவழி நற்செய்தி அறிவிப்புக்கு திருப்பீட அவையை உருவாக்கி, பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்களை, அதன் முதல் தலைவராக நியமித்தார். 2013ம் ஆண்டு சனவரி 16ம் தேதி, மறைக்கல்வி பொறுப்பை, அருள்பணியாளர்கள் பேராயத்திடமிருந்து எடுத்து, புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவையிடம் ஒப்படைத்தார்.

இயேசு கிறிஸ்துவோடு நட்புறவு

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கத்தோலிக்க நம்பிக்கையைப் போதிப்பதையும், அதனைத் தெளிந்துதேர்ந்து வாழ்வதிலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முறைகளைச் சொல்வதையும் தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தார். அதாவது இயேசு கிறிஸ்துவே வாழ்வின் மையமாக இருக்கவேண்டும், அவரோடு நட்புறவு கொள்ளவேண்டும் என்பதை இவர் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். எடுத்துக்காட்டுக்குச் சொல்வதென்றால், இவர், திருத்தந்தையாக ஆற்றிய முதல் திருப்பலி மறையுரையை இவ்வாறுதான் நிறைவு செய்தார். நாம் எல்லாரும் ஏதாவது ஒரு வழியில் அச்சம் கொள்வதில்லையா? கிறிஸ்து நம் வாழ்வில் முழுவதுமாக நுழைய அனுமதித்தால், அவருக்கு நம்மை முழுமையாகத் திறந்து வைத்தால், நம்மிடமிருந்து அவர் எதையாவது எடுத்துவிடக் கூடும் என நாம் பயப்படுவதில்லையா? அப்படி இல்லை. கிறிஸ்து நம் வாழ்வில் நுழைய அனுமதித்தால், நாம் எதையுமே இழக்கப்போவதில்லை. அந்நிலை நம் வாழ்வை முற்றிலும் சுதந்திரமுள்ளதாக, அழகானதாக மற்றும், பெரியதாக மாற்றும். அவரோடுள்ள நட்புறவில் மட்டுமே, அழகையும், விடுதலையையும் நாம் அனுபவிப்போம். நம்மை அவரிடம் கையளித்தால், பதிலுக்கு நூறுமடங்கு பெறுவோம். உண்மைதான். எனவே, கிறிஸ்துவுக்கு நம் கதவுகளை அகலத் திறந்து வையுங்கள். அப்போது உண்மையான வாழ்வைக் கண்டடைவீர்கள்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசு கிறிஸ்துவோடு நட்புறவு என்ற தலைப்பை தனது போதனைகளுக்கு அடிக்கடி எடுத்துக்கொண்டார். Deus caritas est அதாவது "கடவுளே அன்பு" என்பதுதான், அவரது முதல் திருமடலின் தலைப்பு. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரால், ,கடவுளுக்குத் தன்னை வழங்கவும், மற்றவரை அன்புகூரவும் இயலும் என்று இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். Spe Salvi அதாவது "எதிர்நோக்கால் மீட்கப்பட்டுள்ளோம்" என்ற இரண்டாவது திருமடல், 2007ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியும், Caritas in veritate அதாவது "உண்மையில் பிறரன்பு" என்ற மூன்றாவது திருமடல், 2009ம் ஆண்டு ஜூலை 7ம் தேதியும் வெளியிடப்பட்டன. அதில், சமுதாய நீதி குறித்த திருஅவையின் போதனைகளை திருத்தந்தை விளக்கியுள்ளார். தொழிலும், பொருளாதார உறவுகளிலும் நன்னெறிகள் வாழப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும், திருத்தந்தை தனது பணி ஓய்வை அறிவித்த சமயத்தில், Lumen fidei அதாவது "நம்பிக்கையின் ஒளியில்" என்ற தனது நான்காவது திருமடலை நிறைவு செய்திருந்தார். தனது முதல் இரு திருமடல்களைத் தொடர்ந்து, நம்பிக்கை. எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்று இறையியல் புண்ணியங்களை நிறைவு செய்வதாக இதனை எழுதியிருந்தார். ஆயினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே அதனை வெளியிட்டார்.

திருமடல்கள் தவிர, திருத்தூது அறிவுரைகள், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கைகள் ஆகியவற்றையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் மதத்தினருடனும் திருத்தந்தை நல்லுறவு கொண்டிருந்தார். 2006ம் ஆண்டில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் அவர்களும், திருத்தந்தையும் சேர்ந்து, இவ்விரு சபைகளுக்கிடையே நாற்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உரையாடலை மையப்படுத்தி பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இவர், யூத வரலாறு மற்றும், யூத இன அழிவு குறித்து கொண்டிருந்த அக்கறையினால், இவரின் திருத்தந்தை தேர்தலை, யூதக் குழு வரவேற்றது. தலாய் லாமா அவர்கள், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தியதுடன், 2006ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் வந்து திருத்தந்தையைச் சந்தித்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது எட்டு ஆண்டுகள் தலைமைத்துவ பணியில், திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். குறிப்பாக, முதல் மூன்று ஆண்டுகளில், தனது தாயகமான ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொண்டார். போலந்து, இஸ்பெயின், துருக்கி, ஆஸ்ட்ரியா, மால்ட்டா போன்ற நாடுகளிலும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். 2008ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், அதே ஆண்டு ஜூலையில் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றார். சிட்னியில் நடைபெற்ற உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொண்டார், ஆஸ்திரேலியாவில், அருள்பணியாளர்களால் இழைக்கப்பட்ட பாலியல் முறைகேடுகளுக்கு  மன்னிப்பு கேட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பாரிசில் திறந்தவெளி மைதானத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர் அச்சமயம், நவீன பொருளியத்தன்மைக்கு எதிரான கண்டனத்தை தெரிவித்தார்.

இயேசு கிறிஸ்துவே நம் வாழ்வின் மையமாக இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இறையேசுவில் உறங்கிக் கொண்டிருக்கின்றார். ஒரு நல்ல மனிதம்கொண்ட பக்தியுள்ள மனிதர் இவர். அவரது பணிகளை நினைவுகூர்ந்து போற்றும் இவ்வேளையில், அவரின் ஆன்மா நிறைசாந்தி அடையச் செபிப்போம்.

வாழ்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட். என்றென்றும் உயிர்பெறட்டும் அவரின் போதனைகள்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2022, 11:48