தேடுதல்

குவாதலூப்பே அன்னை கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்துகிறார்

2031ஆம் ஆண்டில் குவாதலூப்பே காட்சிகளின் 5ம் நூற்றாண்டு சிறப்பிக்கப்படும். அதற்குரிய நவநாள் தயாரிப்புக்கள் டிசம்பர் 12, இத்திங்களன்று அமெரிக்க கண்டம் முழுவதும் தொடங்கியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

குவாதலூப்பே அன்னை மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, சிறந்ததொரு வாழ்வைத் தேடுகின்ற புலம்பெயர்ந்தோர் உட்பட அனைவர்மீதும் அக்கறை காட்டும் ஒரு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புமாறு அமெரிக்கர்கள் எல்லாருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க கண்டத்தின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியாவின் விழாவான டிசம்பர் 12, இத்திங்கள் உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.

கடவுள் தம் திருமகனின் அன்னை வழியாக தமது உடனிருப்பை மனித சமுதாயத்திற்கு வெளிப்படுத்துகிறார் என்பதை தன் மறையுரையில் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையிலிருப்போர் மற்றும் காயமடைந்தோருக்குப் பரிவன்பு மற்றும் கனிவோடு உதவுவதற்கு நம் உலகின் மீதுள்ள தமது அக்கறையை கடவுள் ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

கடவுள் தலையிடுகின்ற மற்றும், அவர் தம்மையே வெளிப்படுத்துகின்ற வழி எப்போதும் நம்மை வியப்படையச் செய்கிறது மற்றும், நம்மை மகிழ்ச்சியால் நிரப்புகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இயேசு நம்மோடு எப்போதும் இருப்பது குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

இயேசுவின் உடனிருப்பு

கடவுள் நம் மீட்புக்காக, தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார் என்று புனித பவுலடிகளார் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் பதிவுசெய்திருப்பது குறித்த தன் சிந்தனைகளைக் கூறியத் திருத்தந்தை, மரியாவிடம் பிறந்த இயேசுவில், நம் காலத்தின் துயர்நிறைந்த சூழலில் என்றென்றும் இருப்பவர் நுழைந்தார் மற்றும், கடவுள்  நம்மோடு என்றென்றும் இருப்பவராக மாறினார் என்றும், சகோதரர், மற்றும் உடனிருப்பவராக நம்மோடு நடந்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இயேசு பாவம் தவிர மற்ற அனைத்திலும் நண்பராக நமக்கு மிகநெருக்கமாகவும், நம்மோடு இருப்பவராகவும் இருக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, 1531ஆம் ஆண்டில் தற்போதைய மெக்சிகோவின் குவாதலூப்பேயில் அன்னை மரியா அளித்த காட்சி பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

குவாதலூப்பே புனித கன்னி மரியா

குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலி
குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலி

அமெரிக்காவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுச்சி இடம்பெற்ற காலக்கட்டத்தில் கடவுளின் ஆறுதலை வழங்குவதற்காக புனித கன்னி மரியா அமெரிக்காவுக்குச் சென்றார் எனவும், ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் ஆகியும், புதிய உலகமாகிய அமெரிக்காவாழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான மற்றும், துயரமான நேரத்தில், இரு உலகங்களுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பு கொணர்ந்த எழுச்சியை மாற்றுவதற்கு ஆண்டவர் விரும்புகிறார் எனவும் கூறியுள்ளார், திருத்தந்தை.

குவாதலூப்பே புனித கன்னி மரியாவின் காட்சிகளை துயர்நிறைந்த இந்த நம் காலத்தோடு தொடர்புபடுத்தி தன் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இந்நிலையிலும்கூட தன்னலத்தைப் புறக்கணித்து உடன்பிறந்த உணர்வுநிலையை ஏற்குமாறு ஆண்டவர் நம்மை அழைக்கிறார் எனவும், மரியா நம்மோடு தங்குவதற்கு விரும்புகிறார் எனவும், நம் அன்னையாக அவர் இருக்க அனுமதிக்குமாறு அவர் கெஞ்சுகிறார் எனவும் கூறியுள்ளார்.

சமுதாயப் புதுப்பித்தலுக்குச் செபம்

2031ஆம் ஆண்டில் இடம்பெறும் குவாதலூப்பே காட்சிகளின் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தயாரிப்புக்கள் டிசம்பர் 12, இத்திங்களன்று அமெரிக்காவில் கண்டம் அளவில் நவநாள் தொடங்கியுள்ளதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குவாதலூப்பே அன்னை மரியா வழியாக கடவுளோடு சந்திப்பு நடத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்நவநாள் திருப்பயணத்தில் வட மற்றும், தென் அமெரிக்கத் திருஅவைகளின் ஆயர்களும் கத்தோலிக்கரும் பங்குகொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நவநாள் பக்தி முயற்சிகளை, அக்கண்டத்தின் மக்கள் மற்றும், குழுமங்களின் சமூக மற்றும் திருஅவை வாழ்வில் புதுப்பித்தல் இடம்பெறும் நோக்கத்தில் கடைப்பிடிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2022, 19:00